கோவை அருகே, 15 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்


கோவை அருகே, 15 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 14 May 2019 3:45 AM IST (Updated: 14 May 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

கோவைஅருகே 15 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.

கோவை,

கோவை அருகே மதுக்கரையை சேர்ந்த 15 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த 43 வயது நபருக்கு திருமணம் ஆகாமல் இருந்தது. அவருக்கும், 15 வயது சிறுமிக்கும் திருமணம் நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு 16-ந்தேதி (நாளை மறுநாள்) மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சிறுமிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால் தொடர்ந்து படிக்க விரும்பினார். ஆனால் சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் சிறுமிக்கு கட்டாய திருமணம் நடைபெற இருந்தது.

இது குறித்து, 181 என்ற எண்ணிற்கு போன் மூலம் தொடர்பு கொண்டு சிலர் புகார் செய்துள்ளனர். உடனே சென்னை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கோவையில் உள்ள சமூக நல அதிகாரி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அதிகாரிகள் உடனடியாக மதுக்கரைக்கு சென்று சிறுமியின் பெற்றோரிடமும், மணமகனின் பெற்றோரிடமும் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி தவறு என்று எடுத்து கூறி, நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்கள்.

இதையடுத்து, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு சிறுமி மற்றும் மணமகனின் பெற்றோரை வரவழைத்து, சிறுமிக்கு திருமணம் நடத்த மாட்டோம் என்று எழுதி வாங்கி எச்சரித்தனர். சிறுமி தொடர்ந்து கல்வி கற்க அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் கூறும் போது, சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியானதை உறுதிப்படுத்திய பிறகே திருமணம் நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர்.அரசு அலுவலர்கள் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுத்ததால் சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து படிக்க உதவி செய்வதாக கூறிய சமூகநல அலுவலர்களுக்கு, அந்த சிறுமி கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

Next Story