பீர் பாருக்கு வழி சொல்ல மறுத்தவர் துப்பாக்கியால் சுடப்பட்டார் ஒருவர் கைது


பீர் பாருக்கு வழி சொல்ல மறுத்தவர் துப்பாக்கியால் சுடப்பட்டார் ஒருவர் கைது
x
தினத்தந்தி 14 May 2019 5:29 AM IST (Updated: 14 May 2019 5:29 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் பீர் பாருக்கு வழி சொல்ல மறுத்த வாலிபர் துப்பாக்கியால் சுடப்பட்டார். இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

மும்பை,

புனே பிப்வேவாடியை சேர்ந்தவர் சனி சவுத்ரி (வயது17). இவர் சம்பவத்தன்று இரவு அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பியபோது, 3 பேர் ஒரு காரில் வந்தனர்.

அவர்கள் சனி சவுத்ரியிடம் அங்குள்ள பீர் பாருக்கு வழி கேட்டனர். ஆனால் அவர் வழி சொல்ல மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அந்த ஆசாமிகள் சனி சவுத்திரியை மிரட்டி காரில் ஏற்றிச்சென்றனர்.

இதனால் பயந்துபோன அவர் பீர் பார் இருக்கும் இடத்துக்கு அழைத்து சென்று காண்பித்தார். அங்கு அவர்கள் மது குடித்தனர்.

பின்னர் மீண்டும் சனி சவுத்திரியை காரில் அழைத்து கொண்டு டெக்கான் பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து முதலிலேயே ஏன் பீர் பார் இருக்கும் இடத்தை காண்பிக்க மறுத்தாய் எனக் கூறி அடித்து உதைத்தனர்.

இதனால் பயந்து போன சனி சவுத்ரி திருடன்...திருடன்... என சத்தம் போட்டார். இதனால் கோபம் அடைந்த அவர்களில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சனி சவுத்ரியின் காலில் சுட்டார். பின்னர் 3 பேரும் தாங்கள் வந்த காரில் ஏறி தப்பிச்சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சனி சவுத்ரியை சுட்டவர் உள்பட 3 பேரின் உருவமும் பதிவாகியிருந்தது.

விசாரணையில், 3 பேரில் ஒருவர் அகமதுநகரை சேர்ந்த அம்பாதாஸ் அசோக் ஹோண்டே(வயது28) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

தலைமறைவான மற்ற 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story