தஞ்சை மாவட்டத்தில் 252 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு கண்டறியப்பட்ட 15 வாகனங்களுக்கு நோட்டீசு


தஞ்சை மாவட்டத்தில் 252 பள்ளி வாகனங்கள் ஆய்வு குறைபாடு கண்டறியப்பட்ட 15 வாகனங்களுக்கு நோட்டீசு
x
தினத்தந்தி 14 May 2019 11:00 PM GMT (Updated: 14 May 2019 3:52 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் 252 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. குறைபாடு கண்டறியப்பட்ட 15 வாகனங்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு சிறப்பு விதிகளின்படி ஆண்டுதோறும் ஒரே இடத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள், தஞ்சையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று ஆய்வு செய்யப்பட்டன. இதில் 49 பள்ளிகளை சேர்ந்த 252 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் 15 வாகனங்களில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த 15 வாகனங்களுக்கும் நோட்டீசு வழங்கப்பட்டு, குறைபாடுகள் சரி செய்ய மீண்டும் 1 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


இதனை தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், முதன்மைக்கல்வி அதிகாரி சாந்தா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன், போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நெடுஞ்செழியபாண்டியன், குண்டுமணி ஆகியோர் இணைந்து ஆய்வு செய்தனர்.

இதில் வாகனங்களில் உள்ள அவசரகால வழி, தீயணைக்கும் கருவி, இருக்கைகள், வாகனத்தின் வேக அளவு, ஓட்டுனர் உரிமம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன், தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது என்பது குறித்து விளக்கி கூறினார். 108 ஆம்புலன்சு சார்பில் விஜய்பாஸ்கர், சாலை விபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்வது தொடர்பாகவும் விளக்கி கூறினார்.


தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சீட் பெல்ட் அணிவது, ஹெல்மெட் அணிவது, வாகனத்தில் அதிக ஆட்களை ஏற்றக்கூடாது, வாகன பதிவு அளவுகள், கடந்த 10 ஆண்டுகால விபத்து விபரம், விபத்து நடந்த பின்பு காப்பாற்ற, உதவி செய்ய முன்வர வேண்டும் என்பன குறித்த பேனர்கள் அமைத்து இருந்தனர்.

மேலும் அனைத்து வாகன ஓட்டுனர்களும், சாலை விதிகளை மதித்து நடக்கவும், விபத்து இல்லா மாவட்டமாக உருவாக்கவும் போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார் அறிவுரை வழங்கினார்.

Next Story