காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு


காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை: போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 15 May 2019 3:45 AM IST (Updated: 15 May 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதை மறைத்து போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த கணவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திம்மகுடி கிராமம் மனவெளி தெருவை சேர்ந்தவர் கார்த்திக். ஸ்தபதி. இவருடைய மனைவி சுபஸ்ரீ(வயது 23). இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய மகன் அபிஷேக்(5). கடந்த 11-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது சுபஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அன்று இரவு அவருடைய மகன் அபிஷேக்கிற்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவனை உறவினர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 13-ந் தேதி அபிஷேக் பரிதாபமாக இறந்தான். தாய் தற்கொலை செய்து கொண்ட 2 நாளில் மகனும் மர்மமான முறையில் இறந்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. முன்னதாக அபிஷேக்கை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், சுபஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை முறைப்படி போலீசாரிடம் தெரிவிக்காமல், அவருடைய உடல் எரிக்கப்பட்டது போலீசாருக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து திம்மகுடி கிராம நிர்வாக அதிகாரி அழகுராணி சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமலதா, சுபஸ்ரீயின் கணவர் கார்த்திக், கார்த்திக்கின் அண்ணன் கேசவன், கார்த்திக்கின் தங்கை பிரேமா, சுபஸ்ரீயின் தம்பி ஸ்ரீதர் ஆகிய 4 பேர் மீது தற்கொலையை மறைத்ததாக வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் சுபஸ்ரீ ஏன் தற்கொலை செய்து கொண்டார்? சிறுவன் சாவுக்கான காரணம் என்ன? அவனுக்கு வேறு யாராவது விஷம் கொடுத்தார்களா? என்பது குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். 

Next Story