தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து சிறப்பு பயிற்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது


தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து சிறப்பு பயிற்சி ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 14 May 2019 11:15 PM GMT (Updated: 14 May 2019 8:29 PM GMT)

சென்னை ரிப்பன் மாளிகையில் நேற்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து சிறப்பு பயிற்சி நடைபெற்றது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்காக முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

அந்த வகையில் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நேற்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமுக்கு தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி தலைமை தாங்கினார். தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரி தீபக் ஜேக்கப், சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரியும், பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனருமான (பணிகள்) எம்.கோவிந்த ராவ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் உள்ள கலெக்டர் நேர்முக உதவியாளர்(தேர்தல்), தபால் வாக்குகளை மின்னணு முறையில் மாற்றும் முறையை கையாளும் அதிகாரிகள், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள், மாவட்ட கணினி பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தபால் ஓட்டுகள்

வெளிநாட்டில் உள்ள தூதரக அதிகாரிகள், ராணுவம், வெளி மாநிலங்களில் பணியாற்றும் உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் வாக்களித்த தபால் ஓட்டுகளை மின்னணு முறையில் மாற்றுவதற்கான புதிய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய நடைமுறையை செயல்படுத்துவது குறித்த விரிவான பயிற்சி நேற்று தேர்தல் அலுவலர்களுக்கு அளிக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி மற்றும் நாடாளுமன்ற தொகுதி அடிப்படையில் வாக்கு எண்ணும் போது, ஒவ்வொரு சுற்று முடிவிலும் ‘சுவிதா’ என்ற தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் வாக்கு எண்ணிக்கை விவரத்தை பதிவு செய்வது குறித்தும், பதிவு செய்யப்பட்ட வாக்கு விவரங்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கும், இந்திய தேர்தல் ஆணையத்துக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்புவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story