காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி


காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 May 2019 2:40 AM IST (Updated: 15 May 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா ஆனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயரங்கன். விவசாயி. இவரது மகன் கலைச்செல்வன் (வயது 32). அதே கிராமத்தை சேர்ந்த தன்னுடைய உறவினரான லோகநாதன் (38) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் சென்று விட்டு வாலாஜாபாத் வழியாக ஆனம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அய்யம்பேட்டை அருகே செல்லும்போது கலைச்செல்வன் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி வந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரி பஸ் எதிர்பாராத விதமாக கலைச்செல்வன் சென்ற மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் கலைச்செல்வன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த லோகநாதன் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மற்றொரு விபத்து

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த ஓழலூர் கலைஞர் தெருவை சேர்ந்தவர் சேகர் (34). இவர் தாம்பரம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மொபட்டில் சென்றார். கூடுவாஞ்சேரி சீனிவாசபுரம் அருகே செல்லும்போது அதே திசையில் பின்னால் வந்த அரசு பஸ் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட சேகர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story