வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடியை கடித்த மாட்டின் வாய் சிதைந்தது
சத்தியமங்கலம் அருகே வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டு வெடியை கடித்த மாட்டின் வாய் சிதைந்தது.
டி.என்.பாளையம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கே.என்.பாளையம் அருகே உள்ள செல்லிபாளையத்தை சேர்ந்தவர் அம்மாசை (வயது 40). வாழைக்காய் வியாபாரி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் ஒத்தக்குதிரைக்காரர் தோட்டம் பகுதியில் உள்ளது.
அந்த விவசாய நிலத்தில் ஒரு மாட்டை மேய்ச்சலுக்காக அம்மாசையின் தந்தை மாரன் நேற்று மாலை ஓட்டி சென்றார். அங்கு மாட்டை கயிறு மூலம் கட்டி மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென டமார் என்ற சத்தம் கேட்டதுடன், மாடும் கத்தியது.
சத்தம் கேட்டதும் மாடு மேய்ந்து கொண்டிருந்த இடம் நோக்கி மாரன் ஓடினார். அப்போது மாட்டின் வாய் சிதைந்து அதில் இருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்ததை கண்டதும் அவர் பதற்றம் அடைந்தார்.
அப்போது அங்கு கிடந்த நாட்டு வெடியை கடித்ததால் அது வெடித்து மாட்டின் வாய் சிதைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்த மாட்டை அவர் வீட்டுக்கு ஓட்டி வந்தார்.
இதுகுறித்து செல்லிபாளையத்தை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘இந்த பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது. இவர்கள் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகளை ஆங்காங்கே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இதை கடிக்கும் மாடு மற்றும் ஆடுகள் இறந்து உள்ளன. கடந்த மாதம் அம்மாசையின் ஒரு மாடும், ஒரு ஆடும் இதேபோல் நாட்டு வெடியை கடித்து இறந்து உள்ளன. மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கிராமத்தையொட்டி அடிமலை மாதையன் கோவில் பகுதியை சேர்ந்த ரவி என்பவருடைய 4 மாடுகள், 3 நாய்கள் மற்றும் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த 2 நாய்கள் இதேபோன்று நாட்டு வெடியை கடித்து இறந்து உள்ளன.
இந்த நாட்டு வெடியின் மீது அந்த பகுதியில் நடமாடும் விவசாயிகள் கால் வைத்தால் அதன் அழுத்தம் காரணமாக வெடித்து விபரீதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் ரோந்து சென்று மர்ம நபர்களின் நடமாட்டங்களை தடுப்பதுடன், அவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்,’ என்றனர்.