ஈரோட்டில் பரபரப்பு அடுத்தடுத்து 3 தனியார் பஸ்கள் மோதல் 4 பயணிகள் காயம்
ஈரோட்டில் அடுத்தடுத்து 3 தனியார் பஸ்கள் மோதிய விபத்தில் 4 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
ஈரோடு,
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்துக்கு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரை சுந்தர்ராஜ் (வயது 28) என்பவர் ஓட்டிச்சென்றார். ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை திடல் அருகில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் டீசல் போடுவதற்காக சுந்தர்ராஜ் தனது காரை வலது புறமாக திருப்ப முயன்றார். அப்போது எதிர் திசையில் இருந்து வரிசையாக வாகனங்கள் வந்ததால் அவர் காரை நடுரோட்டில் நிறுத்தினார்.
அப்போது காருக்கு பின்னால் ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பஸ்சின் டிரைவர் திடீரென பிரேக் போட்டு நிறுத்தினார். இதனால் அந்த பஸ்சுக்கு பின்புறத்தில் எடப்பாடி நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் மோதியது. மேலும், அந்த பஸ்சுக்கு பின்னால் ஓமலூர் நோக்கி சென்ற மற்றொரு தனியார் பஸ் மோதியது.
இந்த விபத்தில் சேலம் நோக்கி சென்ற பஸ்சின் பின்புற கண்ணாடியும், எடப்பாடி நோக்கி சென்ற பஸ்சின் முன்புற, பின்புற கண்ணாடியும், ஓமலூர் நோக்கி சென்ற பஸ்சின் முன்புற கண்ணாடியும் உடைந்தது. விபத்து நடந்தும் பஸ்களில் இருந்த பயணிகள் அச்சம் அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பூசாரிப்பட்டியை சேர்ந்த சீனிவாசனின் மனைவி சின்னபொன்னு (வயது 50), அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமாரின் மகன்கள் கார்த்திகேயன் (12), கமலேஷ் (10), தவுசம்பட்டியை சேர்ந்த சரவணனின் மகன் விமலன் (5) ஆகியோர் காயம் அடைந்தனர்.
அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருபுறங்களிலும் வழிநெடுகிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொண்டனர். விபத்து குறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோட்டில் அடுத்தடுத்து 3 தனியார் பஸ்கள் மோதிக்கொண்ட விபத்து பரபரப்பை ஏற்படுத்தியது.