தாராபுரம் அருகே, குடிநீர் கேட்டு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்


தாராபுரம் அருகே, குடிநீர் கேட்டு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
x
தினத்தந்தி 15 May 2019 4:15 AM IST (Updated: 15 May 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே உள்ள மரவபாளையத்தை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மூலனூர்,

தாராபுரம் அருகே உள்ள குண்டடம் ஊராட்சிக்கு உட்பட்டது மரவபாளையம் கிராமம். இங்கு சுமார் 100–க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இதில் சுமார் 400–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி இது வரையும் ஆழ்குழாய் கிணற்று நீரை தான் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். அந்த கிராமத்தில் மேல்நிலை நீர்தொட்டி மற்றும் தரைநிலை நீர்தொட்டிகள் என 2 தண்ணீர் தொட்டிகள் உள்ளன.

அங்குள்ள ஆழ்குழாய் கிணற்றில் கிடைக்கும் நீர் அதிக அளவில் உவர்ப்பு தன்மையாகவும் இரும்புதுரு கலந்து பழுப்பு நிறத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர் குறைந்து விட்ட காரணத்தால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் குறைந்து விட்டது. அதனால் அப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் கிடைப்பதில்லை எனவும் கூறுகின்றனர்.

மேலும் இந்த கிரமத்திற்கு அருகே உள்ள வேங்கிபாளையம், பீலிக்காம்பட்டி ஆகிய கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடிநீர் வினியோகம் செய்யப்படுவதாகவும் தங்கள் பகுதிக்கு மட்டும் நல்ல குடிநீர் கிடைப்பதில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மரவபாளையம் கிராமத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் நேற்று தாராபுரம் தாசில்தார் அலுவலகத்தை பெண்கள் காலி குடங்கள் மற்றும் அவர்களது கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்றில் எடுக்கப்பட்ட தண்ணீரை பாட்டில்களில் அடைத்து கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த தாசில்தார் ரவிச்சந்திரன் முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நேரில் வந்த பார்த்து 2 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.இதன் பேரில் பெண்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story