மூலனூர் அருகே தொடர்ந்து வீடுகளில் தீப்பிடிப்பதால் பொதுமக்கள் அச்சம்


மூலனூர் அருகே தொடர்ந்து வீடுகளில் தீப்பிடிப்பதால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 15 May 2019 4:00 AM IST (Updated: 15 May 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

மூலனூர் அருகே தொடர்ந்து வீடுகளில் தீப்பிடிப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மூலனூர்,

மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்.காளிபாளையம் ஊராட்சி காளிபாளையம், வாளநாயக்கன்வலசு ஆகிய பகுதிகளில் சுமார் 300–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை இரவு மற்றும் பகல் நேரங்களில் வீடுகளின் மேல் திடீரென்று கற்கள் விழுகின்றதென்றும், அதன்பின்னர் அந்த நிலை மாறி வீடுகளின் உள்ளே ஆங்காங்கே தீ பற்றி எரிகின்றது அப்பகுதி பொதுமக்கள் போலீசில் புகார் செய்தனர்.

இந்த தீ விபத்துக்கு காரணம் என்ன? என்று இது வரை யாருக்கும் தெரியவில்லை. எனவே அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வீடுகளில் தீ பிடிப்பதை

கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வீடுகளை காலி செய்து விட்டு சாலையோரம் குடியேறி சமைத்து சாப்பிடும் நிலை ஏற்படும் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர்.

இதையடுத்து தாராபுரம் சப்–கலெக்டர் பவன்குமார் மற்றும் தாராபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது யாரும் அச்சப்பட தேவையில்லை அரசு உரிய நடவடிக்கை எடுத்து பொது மக்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கூலி வேலை பார்த்து வரும் வீரக்குமார் என்பவரது வீட்டில் நேற்று மீண்டும் காலை மற்றும் மதிய வேளையில் இரண்டு முறை திடீரென்று தீப்பற்றியது. மேலும் 3 இடங்களில் தீப்பெட்டிகள் வந்து விழுந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து வீடுகளில் தீப்பிடிப்பதால் அப்பகுதி மக்கள் மீண்டும் நிம்மதி இழந்து உள்ளனர்.


Next Story