பொங்கலூர் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் மூழ்கி பலியான வாலிபரின் உடல் மீட்பு


பொங்கலூர் அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் மூழ்கி பலியான வாலிபரின் உடல் மீட்பு
x
தினத்தந்தி 15 May 2019 4:15 AM IST (Updated: 15 May 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி பலியான வாலிபரின் உடல் மீட்கப்பட்டது.

பொங்கலூர்,

பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 45). இவரது மனைவி இந்திராணி (38). இவர்களது மகன்கள் அரவிந்தன்(21) மற்றும் அருண்குமார்(18). சுபாஷ் பாப்பம்பட்டியில் ஓட்டல் நடத்தி வருகிறார். அருண்குமார் பிளஸ்–2 முடித்துவிட்டு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் அருண்குமார் தனது நண்பர்களுடன் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் வந்து பி.ஏ.பி.வாய்க்காலில் படியில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்தார். அப்போது அருண்குமார் எதிர்பாராத விதமாக தண்ணீரின் உள்ளே விழுந்துவிட்டார். நீச்சல் தெரியாததால் அவரால் தண்ணீரை விட்டு மேலே வரமுடியாமல் தத்தளித்துள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் அருண்குமாரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் தண்ணீரின் வேகத்தில் அருண்குமார் அடித்துச்செல்லப்பட்டு மூழ்கி பலியானார்.

இதுகுறித்து அருண்குமாரின் பெற்றோருக்கும், அவினாசிபாளையம் போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பி.ஏ.பி. வாய்க்கால் பகுதியில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அன்று இரவாகி விட்டதால் அருண்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் நேற்று காலை மீண்டும் அருண்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் வரை சென்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை பொங்கலூரை அடுத்த அலகுமலை, வேலாயுதம்பாளையம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் வாலிபர் ஒருவரின் உடல் தண்ணீரில் மிதந்து வந்துள்ளது. இந்த உடலை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தண்ணீரில் இறங்கி அந்த உடலை மீட்டு கரையில் போட்டனர். பின்னர் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருண்குமாரின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு அருண்குமாரின் பெற்றோர் சென்று அந்த உடல் அருண்குமார்தான் என்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து போலீசார் அருண்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். நண்பர்களுடன் பி.ஏ.பி. வாய்க்காலுக்கு குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story