மைசூரு அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


மைசூரு அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 May 2019 3:16 AM IST (Updated: 15 May 2019 3:16 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு அரண் மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மைசூரு,

மைசூருவில் உலகப்புகழ் பெற்ற மைசூரு அரண்மனை அமைந்துள்ளது. இது கர்நாடகத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இங்கு பிரமாண்டமாக நடைபெறும் மைசூரு தசரா விழா உலக அளவில் மிகவும் பிரசித்திப் பெற்றது. மைசூரு தசரா விழாவின்போது 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை யானை சுமந்து செல்லும் ஜம்பு சவாரி ஊர்வலத்தைப் பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் கர்நாடகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக மைசூரு அரண்மனை இருந்து வருகிறது. மைசூரு அரண்மனையைக் காண தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். கடுமையான சோதனைகளுக்கு பிறகே சுற்றுலா பயணிகள் அரண்மனைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இப்படி பல்வேறு சிறப்புமிக்க மைசூரு அரண்மனைக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

நேற்று காலையில் மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு ஒரு மர்ம நபர் போன் செய்துள்ளார். அவர் அரண்மனையில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், இன்னும் சற்று நேரத்தில் அது வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியும், பதற்றமும் அடைந்த ஊழியர்கள் உடனடியாக இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார், மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோருடன் அரண்மனைக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் அரண்மனைக்குள் இருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேற்றினர். அதன்பிறகு சுற்றுலா பயணிகள் யாரும் அரண்மனைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

பீதியை கிளப்ப...

பின்னர் போலீசார் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர்கள் ஆகியவற்றின் மூலம் அரண்மனை முழுவதும் சோதனை நடத்தினர். அப்போது அரண்மனையிலும், அரண்மனை வளாகத்திலும் வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்று போலீசார் கண்டறிந்தனர். யாரோ ஒரு மர்ம நபர் வேண்டுமென்றே பீதியை கிளப்ப அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசிய தொலைபேசி எண்ணை கண்டறிந்து அதன்மூலம் விசாரணையை தொடங்கி உள்ளனர். அவரை வலைவீசியும் தேடிவருகிறார்கள். போலீசாரின் சோதனை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது. அதுவரையில் சுற்றுலா பயணிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சோதனை முழுவதும் முடிவடைந்த பின்னரே சுற்றுலா பயணிகள் அரண்மனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

விரைவில் கைது செய்வோம்

மேலும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து அரண்மனை வளாகத்திலும், அரண்மனைக்குள்ளும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து மைசூருவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அரண்மனை உள்பட அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்படி இருந்தும் மர்ம நபர் அரண்மனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது சகித்துக் கொள்ள முடியாதது. அந்த மர்ம நபரை விரைவில் கைது செய்வோம்’’ என்று கூறினார்.

Next Story