கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு சித்தராமையா தான் ‘வெடிகுண்டு’ ஜெகதீஷ் ஷெட்டர் பரபரப்பு குற்றச்சாட்டு


கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு சித்தராமையா தான் ‘வெடிகுண்டு’ ஜெகதீஷ் ஷெட்டர் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 May 2019 3:20 AM IST (Updated: 15 May 2019 3:20 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கூட்டணி அரசுக்கு சித்தராமையா தான்  வெடிகுண்டு என்று ஜெகதீஷ் ஷெட்டர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

பெங்களூரு,

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ெஷட்டர் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சித்தராமையா விரும்பவில்லை

மண்டியா தொகுதியில் சுமலதா சுயேச்சையாக போட்டியிட்டதற்கு பின்னால் சித்தராமையா உள்ளார். சுயேச்சையாக போட்டியிடுமாறு சுமலதாவிடம் சித்தராமையா தான் கூறினார். சுமலதா ஏற்பாடு செய்த விருந்தில் சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அனைவரும் பங்கேற்றது இதற்கு சாட்சி ஆகும்.

நிகில் குமாரசாமி வெற்றி பெறுவதை சித்தராமையா விரும்பவில்லை. கூட்டணியில் நடந்து வரும் மோதல் தற்போது பகிரங்கமாகியுள்ளது. சித்தராமையாவை ஜனதாதளம் (எஸ்) தலைவர் எச்.விஸ்வநாத் விமர்சித்து பேசியதின் பின்னணியில் குமாரசாமி உள்ளார்.

பகிரங்க யுத்தம்

இதன் மூலம் கூட்டணி தலைவர்கள் பகிரங்கமாக வார்த்தை யுத்தம் தொடங்கியுள்ளனர். குந்துகோலில் பிரசாரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் குமாரசாமி வரவில்லை. கட்சி நிர்வாகியின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அத்துடன் குந்துகோலில் பிரசாரம் செய்துவிட்டு சென்றுள்ளார்.

4 ஆண்டுகளுக்கு பிறகு காலியாகும் முதல்-மந்திரி நாற்காலிக்கு, அடுத்த முதல்-மந்திரி நானே என்று சித்தராமையா கூறிக்கொண்டு சுற்றுகிறார். சித்தராமையா தான் அடுத்த முதல்-மந்திரி என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அதை சித்தராமையா தடுக்க வில்லை.

அரசு பங்களா

தான் முதல்-மந்திரியாக வேண்டும் என்ற மறைமுக நோக்கம் சித்தராமையாவுக்கு உள்ளது. அரசு பங்களாவில் தான் இன்னும் அவர் வசித்து வருகிறார். இதற்கு சித்தராமையா பதிலளிக்க வேண்டும்.

முதல்-மந்திரியாக இருப்பவர்கள், ஆட்சி அதிகாரம் போன பிறகு 2 மாதத்தில் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும். ஆனால் சித்தராமையா ஓராண்டு ஆகியும் அரசு பங்களாவை காலி செய்யவில்லை. அவர் சட்டவிரோதமாக அந்த பங்களாவில் உள்ளார். மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெயரில் பங்களாவை பெற்றுக்கொண்டு, அங்கு சித்தராமையா வசித்து வருகிறார்.

வெடிகுண்டு

கூட்டணி அரசுக்கு சித்தராமையா தான் வெடிகுண்டு. அவர் வெடிகுண்டை வைத்துள்ளார். நேரம் பார்த்து பட்டனை அழுத்தினால், அந்த வெடிகுண்டு வெடித்து சிதறிவிடும். வருகிற 23-ந் தேதிக்கு பிறகு சித்தராமையா பட்டனை அழுத்துவார்.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Next Story