உசிலம்பட்டி பகுதியில் கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 5 பேர் சிக்கினர்


உசிலம்பட்டி பகுதியில் கஞ்சாவுடன் பெண்கள் உள்பட 5 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 14 May 2019 10:25 PM GMT (Updated: 14 May 2019 10:25 PM GMT)

உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா வைத்திருந்த பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி பஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரித்ததில், அவர்கள் ஆந்திராவை சேர்ந்த பெரியசாமி(வயது 70), லட்சுமி (35) என்பதும், அவர்கள் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்த 4 கிலோ 100 கிராம் சஞ்சா மற்றும் ரூ.2,550ஐ பறிமுதல் செய்து, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த உசிலம்பட்டி சன்னாசி செட்டியார் தெருவை சேர்ந்த காசிராஜன் மனைவி நதியா(40), கணவாய்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(38) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இதேபோல் எழுமலை அருகே மானூத்தை சேர்ந்த விருமாண்டி (55) என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எழுமலை போலீசார் அங்கு சென்று சோதனையிட்டபோது, விருமாண்டி கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 800 கிராம் கஞ்சா, ரூ.5010ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

பேரையூர் அருகே கணவாய்பட்டி கிராமத்தில் சேடபட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஜெயம் மனைவி செல்வமணி (41) என்பவர் வீட்டினுள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வமணியை கைது செய்தனர்.

எம்.கல்லுப்பட்டி போலீசார் டி.கிருஷ்ணாபுரம் பஸ் நிலையத்தில் சோதனை செய்தபோது, காசம்மாள் (55) என்பவர் கைப்பையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காசம்மாளை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

ஆக மொத்தம் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 9 கிலோ 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Next Story