கடந்த ஆண்டை விட டெங்கு பாதிப்பு குறைவு சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரி,
சுகாதாரத்துறை உதவி இயக்குனர்கள் சுந்தர்ராஜ் (பைலேரியா), கணேசன் (மலேரியா) ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:–
தேசிய டெங்கு தினத்தையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 7மணியளவில் கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் டெங்கு விழிப்புணர்வு கூட்டம் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 7.45 மணி அளவில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியை தலைமை செயலாளர் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார். கண்காட்சி காலை இரவு 8.30 மணிவரை நடைபெறும்.
கண்காட்சியில் நோய் கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் கொசுக்கள் வளரும் நீர்நிலைகள் மற்றும் கொசுக்களின் பல்வேறு வளர்ச்சி ஆகியவற்றை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் காட்சிப்படுத்தப்படும். சித்த மருத்துவ நிர்வாகம் சார்பில் இயற்கை முறையில் கொசுக்கள் வராமல் விரட்டும் பல்வேறு மூலிகை செடிகள் காட்சிப்படுத்தப்பட்டு காய்ச்சல் வராமல் கட்டுப்படுத்தக்கூடிய மூலிகைகளின் குணங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்படும்.
தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு திட்ட அலுவலகம் சார்பில் டெங்கு நோய் பரப்பும் கொசுக்கள் நம் வீட்டிலும், வீட்டை சுற்றிலும் உருவாக்கக்கூடிய நீர்தேங்கிய பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்துவதோடு நோய் வராமல் தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளும் விளக்கப்படும்.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் டெங்கு பாதிப்பு 581 பேருக்கு இருந்தது. அதில் 2 பேர் இறந்தனர். இந்த வருடம் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது. 250 பேர்தான் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எதுவும் கிடையாது.
லாஸ்பேட்டை அசோக் நகர் பகுதியில் வாணிதாசன் வீதி, பாரதிதாசன் வீதி, பாரதியார் வீதிகளில் டெங்கு பாதிப்பு அதிகம் இருந்தது. மத்திய அரசின் சுகாதாரத்துறையின் தென்மண்டல அலுவலகத்தை சேர்ந்த பூச்சியியல் நிபுணர்கள் லாஸ்பேட்டை, கிருமாம்பாக்கம், முருங்கப்பாக்கம் பகுதியில் ஆய்வு செய்கின்றனர். இது வழக்கமான ஆய்வுதான்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.