கோவை இருகூரில், மேம்பாலத்தில் நேருக்கு நேர் மோதிய லாரிகள் 80 அடி பள்ளத்தில் விழுந்தன - டிரைவர் பலி, இன்னொருவர் படுகாயம்


கோவை இருகூரில், மேம்பாலத்தில் நேருக்கு நேர் மோதிய லாரிகள் 80 அடி பள்ளத்தில் விழுந்தன - டிரைவர் பலி, இன்னொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 15 May 2019 4:30 AM IST (Updated: 15 May 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

இருகூர் மேம்பாலத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதி 80 அடி பள்ளத்தில் விழுந்தன. இதில் கேரள லாரி டிரைவர் பலியானார். மற்றொரு லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார்.

சிங்காநல்லூர்,

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராகவேந்திரா (வயது 24). லாரி டிரைவர். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து லாரியில் பழங்கள் ஏற்றிக்கொண்டு, கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது கேரளாவில் இருந்து எதிர்புறத்தில் ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அதை கேரள மாநிலம் சேர்த்தலா பகுதியை சேர்ந்த ஜெயஸ் (38) என்பவர் ஓட்டி வந்தார்.

இருலாரிகளும் நேற்று அதிகாலை 3 மணியளவில் கோவை ஒண்டிப்புதூரை அடுத்த எல் அண்ட் டி. பைபாஸ் ரோட்டில் இருகூர் ரெயில்வே மேம்பாலத்தில் எதிர்எதிரே வந்துகொண்டிருந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில் 2 லாரிகளும் நேருக்கு நேராக மோதிக்கொண்டன.தொடர்ந்து தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு 80 அடி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தன. இதில் கேரள லாரி டிரைவர் ஜெயஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு லாரி டிரைவர் ராகவேந்திரா தப்பிக்க முயன்று லாரியில் இருந்து குதித்ததில் படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த ராகவேந்திராவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில் விபத்து நடந்த இடத்திற்கு போக்குவரத்து புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து ஜெயஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய 2 லாரிகளும் 80 அடி பள்ளத்தில் விழுந்ததால் பலத்த சேதம் அடைந்தன. மேலும் இந்த சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு திரண்டனர். பாலத்தின் மீது பொதுமக்கள் கூட்டம் அதிகமானதால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story