நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதல், உடல் நசுங்கி டிரைவர் பலி


நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதல், உடல் நசுங்கி டிரைவர் பலி
x
தினத்தந்தி 15 May 2019 4:00 AM IST (Updated: 15 May 2019 5:43 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் நின்ற லாரி மீது சரக்கு வேன் மோதியதில், டிரைவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்,

நிலக்கோட்டை அருகேயுள்ள நரியூத்து கிராமத்தை சேர்ந்தவர் அமல்ராஜ். இவருடைய மகன் டேவிட்நிர்மல் (வயது 34). சரக்கு வேன் டிரைவர். இவர் நேற்று காலை சரக்கு வேனில், தேங்காய்நார் கழிவுகளை ஏற்றிக் கொண்டு நத்தம் நோக்கி ஓட்டி சென்றார். திண்டுக்கல் நாகல்நகர் ரெயில்வே மேம்பாலத்தின் இறக்கத்தில் சரக்கு வேன் சென்றது. அப்போது எதிர்பாராத வகையில் சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்தது.

உடனே டேவிட் நிர்மல் சரக்கு வேனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுயன்றார். அதற்குள் மேம்பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நின்ற லாரியின் மீது, சரக்கு வேன் பயங்கரமாக மோதியது. இதில் சரக்கு வேனின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. அதற்குள் சிக்கிக் கொண்ட டிரைவர் டேவிட் நிர்மல் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து டேவிட்நிர்மலின் உடலை மீட்க முயன்றனர். ஆனால், இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதால் உடனடியாக மீட்க முடியவில்லை. இதையடுத்து திண்டுக்கல் வடக்கு போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி, டேவிட் நிர்மலின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக் கல்லில் நத்தம் சாலையில் மேம்பாலத்துக்கு மிக அருகில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதோடு, விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, அந்த பகுதியில் லாரிகள் நிறுத்தப்படுவதை போலீசார் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story