விருத்தாசலம் புறவழிச்சாலையில் டிரைவர் மர்ம சாவு - போலீசார் விசாரணை
விருத்தாசலம் புறவழிச்சாலையில் உடல் அழுகிய நிலையில் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் புறவழிச்சாலையோர பள்ளத்தில் நேற்று அழுகிய நிலையில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது பற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், மணவாளநல்லூரை சேர்ந்த கல்யாணசுந்தரம்(வயது 60) என்பதும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்பதும், தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், நரம்பு தளர்ச்சி காரணமாக கல்யாணசுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட அவர், புறவழிச்சாலையில் உள்ள ஒரு சர்வீஸ் கடையில் காரை பழுதுநீக்கம் செய்ய நிறுத்திவிட்டு மாயமானதும் தெரியவந்தது.
இது குறித்து கல்யாணசுந்தரத்தின் மகன் கணேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் புறவழிச்சாலையை கடந்தபோது, அவ்வழியே சென்ற வாகனம் மோதி கல்யாணசுந்தரம் இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story