ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து - பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்


ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து - பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்
x
தினத்தந்தி 15 May 2019 4:45 AM IST (Updated: 15 May 2019 5:47 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பாரதிநகரில், ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் திறந்த வேனில் நின்று கொண்டு மக்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது;-

ஓட்டப்பிடாரம் தொகுதியில் மக்களுக்கு நல்லது செய்வதற்காக அ.தி.மு.க. சார்பில் மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். தேர்தல் முடிந்த பின்னர் ஆளும் கட்சி சார்பில் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். பொங்கல் பரிசாக ரூ.1000 பெறாதவர்களுக்கும் அந்த பணம் வழங்கப்படும்.

குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும். வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். இந்த தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைவேற்றப்படும்.

தி.மு.க. ஆட்சி காலத்தில் மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட்டத்தை மக்கள் மறக்க கூடாது. இந்த ஆட்சியில் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை இல்லை. வருகிற 23-ந்தேதியன்று நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சி அமோக வெற்றி பெறும் என்பது உறுதி. அதே போல் நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் நடக்க உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

வெற்றி பெற்ற பின்னர் பிரதமரை சந்தித்து நதிகளை இணைப்போம். நதிகளை இணைப்பதன் மூலம் விவசாயத்துக்கும், குடிநீர் பிரச்சினைக்கும் நிச்சயமாக நிரந்தர தீர்வு காணப்படும். இந்த அரசு பெண்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் கொண்டு வரும். ஆளும் கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள். அப்போது தான் மக்கள் பிரச்சினை தீர்க்கப்படும். தி.மு.க. கொடுக்கும் வாக்குறுதி வெத்து வாக்குறுதி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார். அதனை தொடர்ந்து அவர் ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அவருடன் வேட்பாளர் மோகன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர், காமராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகநயினார், அழகிரிசாமி, அ.தி.மு.க. முத்தையாபுரம் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story