சாகச பிரியர்களுக்கேற்ற ‘டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர்’


சாகச பிரியர்களுக்கேற்ற ‘டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர்’
x
தினத்தந்தி 15 May 2019 12:27 PM IST (Updated: 15 May 2019 12:27 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் இப்போது சாகசப் பிரியர்களுக்கான பைக்குகளின் விற்பனை அதிகரித்து வருகிறது.

இளைஞர்களை வெகுவாகக் கவர்வதற்காக முன்னணி நிறுவனங்கள் சாகச பைக்குகளை அதிக அளவில் அறிமுகம் செய்கின்றன. அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரீமியம் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் புதிய மாடல் ஸ்கிராம்ப்ளர் 1200 எக்ஸ்.சி. மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் இம்மாதம் 23-ந் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் இரண்டு மாடல்களில் இது கிடைக்கிறது. எக்ஸ்.சி. மற்றும் எக்ஸ்.இ. என இரண்டு வகைகளில் இது வந்துள்ளது. இதில் எக்ஸ்.சி. மாடல் மட்டும் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மாடலில் டபுள் கிரேடில் சேசிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முதல் முறையாக இதன் முன்சக்கரம் 21 அங்குல அளவிலும், பின் சக்கரம் 17 அங்குல அளவிலும் உள்ளதாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. வயர் ஸ்போக் சக்கரங்களைக் கொண்ட இந்த மோட்டார் சைக்கிளில் டியூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சாகசப் பயணத்துக்கேற்ற வகையில் பைரேலி ஸ்கார்பியன் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவை நெடுந்தூர வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் டயர்களாகும். இதில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. இதில் பிரெம்போ எம்.50 நான்கு பிஸ்டன் காலிபர் டிஸ்க் பிரேக் முன் சக்கரத்திலும், டியூயல் பிஸ்டன் பிரெம்போ டிஸ்க் பிரேக் பின் சக்கரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள என்ஜின் ஏற்கனவே தர்க்ஸ்டன் மாடலில் பயன்படுத்தப்பட்டதாகும்.

இது 90 ஹெச்.பி. திறனை 7,400 ஆர்.பி.எம். வேகத்திலும், 110 நியூட்டன் மீட்டர் இழுதிறனை 3,950 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், டிராக்‌ஷன் கண்ட்ரோல் வசதி, ஏ.பி.எஸ். (ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்) போன்றவை உள்ளன இதில் ஐந்து வகையான ஓட்டுநர் தேர்வு நிலைகள் உள்ளன.

சாதாரண சாலை, மழை நேர சாலை, கரடு முரடான சாலை, ஸ்போர்ட் மற்றும் ஒருவர் மட்டும் பயணிப்பது என ஐந்து வகையான ஓட்டும் நிலைகள் உள்ளன. இதில் டி.எப்.டி. டிஸ்பிளே உள்ளது. நேவிகேசன் வசதி, புளூடூத் இணைப்பு வசதி, டயர் காற்றழுத்தத்தை உணர்த்துவது, யு.எஸ்.பி. போர்ட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் விலை ரூ.15 லட்சத்துக்குள் இருக்கும் என தெரிகிறது.


Next Story