இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலை


இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலை
x
தினத்தந்தி 15 May 2019 7:30 AM GMT (Updated: 15 May 2019 7:30 AM GMT)

இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலைக்கு சென்று திரும்ப இந்த கோடை விடுமுறையில் திட்டமிடுங்கள்.

சுற்றுலா என்றாலே அதிக செலவு பிடிக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். குறைந்த செலவில் நிறைவாக குடும்பத்துடன் சென்று வர பல பகுதிகள் தமிழகத்தில் உள்ளன. மனதுக்கு நிறைவாக, இயற்கை எழில் கொஞ்சும் கொல்லி மலைக்கு சென்று திரும்ப இந்த கோடை விடுமுறையில் திட்ட மிடுங்கள். மனதுக்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஆரோக்கியமும் நிச்சயம் கிடைக்கும்.

இந்த மலை உச்சியில் எட்டுக்கை அம்மன் (கொல்லி பாவை) இருப்பதால் இது கொல்லி மலை என்றழைக்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலை வாசஸ்தலம் சேலத்தில்இருந்து 87 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 135 கி.மீ. தொலைவிலும், சென்னையில்இருந்து 395 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. கொல்லி மலையின் ஆரம்பம் செம்மேடு ஆகும். கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் முதல் 1,300 மீட்டர் உயரத்தில் இது அமைந்துள்ளது. 280 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த கொல்லிமலை பிராந்தியம் பார்ப்பதற்கே பசுமை சூழ்ந்ததாக உள்ளது. வர்த்தக ரீதியில் இந்த மலைப் பிராந்தியம் பெருமளவில் பிரபலம் ஆகாததால் இன்னமும் இதன் இயற்கை தன்மை குறையாமல் திகழ்கிறது. இங்கு 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

மலை உச்சியில் அமர்ந்துள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. துர் சக்திகளை விரட்டும் சக்திபடைத்த தெய்வமாக சுற்றுப்புற மக்களால் பெரிதும் போற்றப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் அம்மனை தரிசிக்க பலரும் வருகின்றனர். கடவுள் பக்தியைத் தவிர்த்துவிட்டு சுற்றுலா செல்ல விரும்பினாலும் அதற்கு ஏற்ற இடம் இது என்பதுதான் இம்மலையின் சிறப்பு.

மலையேற்ற, சாகசப் பிரியர்களின் பிரதான இடமாக கொல்லிமலை உள்ளது. இங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்வது மிகவும் சிறப்பான பயணமாக இருக்கும். 200 மீட்டர் தூரத்தில் இருந்தாலும் அருவியின் சாரல் உங்கள் மேல் நிச்சயம் விழும். அதை ரசித்தபடியே அருவிக்குச் செல்லலாம்.

இந்த மலையில் இரண்டு விதமான பகுதிகள் உள்ளன. சேக்குபாறை வழியாகவும், மற்றொன்று செல்லூர் நாடு வழியாகவும் செல்ல முடியும். தமிழக அரசு இங்குதான் அன்னாசிபழ ஆராய்ச்சி மையத்தை நிறுவி செயல்படுத்தி வருகிறது. இது சேக்குபாறை வியூபாயிண்டில் அமைந்துள்ளது. குண்டூர் நாடு, புளியஞ்சோலை, அரியூர் சோலை ஆகியன பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாகும். அரபலேஸ்வரர் ஆலயம், சித்தர்கள் குகை, தாவரவியல் பூங்கா, மசிலா அருவி, செல்லூர் வியூ பாயிண்ட் ஆகியன சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய பகுதிகளாகும். சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இப்பகுதியில் படகுக் குழாம் ஒன்றை நடத்துகிறது. படகு சவாரி செல்வதும் இனிமையான அனுபவமாகும். ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதத்தில் சுற்றுலா விழா கொண்டாடப்படுகிறது. இதை அன்னாசி பழ ஆராய்ச்சி மையம் நடத்துகிறது. மேலும் ஓரி விழா மிகவும் பிரமாண்டமாக இங்கு கொண்டாடப்படுகிறது.

கொல்லி மலை முழுவதும் அடர்ந்த வனப் பகுதியால் சூழப்பட்டுள்ளது. இங்கு தேயிலை, காபி, அன்னாசி, மிளகு, பலா உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இங்கு வன விலங்குகளும் உள்ளன. கரடி, குலைக்கும் மான், ஓநாய், கீரிப்பிள்ளை, அரிய வகை எறும்பு திண்ணி, காட்டு பூனை உள்ளிட்ட விலங்குகளும், பாம்பு, மலைப்பாம்பு உள்ளிட்ட ஊர்வனவும் இங்கு உள்ளன. அரிய வகை பறவையினங்களையும் இங்கு காணலாம். ஆண்டு முழுவதும் இந்த மலைப் பகுதிக்கு செல்லலாம். மழைக் காலங்களை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கடுமையான மழை பெய்யும்போது மண் அரிப்பால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உண்டு.

இப்பகுதியில் சில ரிசார்ட்டுகளும் லாட்ஜ்களும் உள்ளன. மலைப் பகுதியாக இருந்தாலும் நீங்கள் விரும்பினால் இங்கு பயிராகும் அரிசி, தேன், காபி, பழங்கள் உள்ளிட்டவற்றை உங்கள் வீட்டுக்கு வாங்கி வரலாம்.

இவை விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு வாராந்திர சந்தையும் நடைபெறுகிறது.


Next Story