மாவட்ட செய்திகள்

பரிசல் பயணம், அருவியில் குளியல் இன்பச் சுற்றுலாவுக்கு ஏற்ற பரளிக்காடு + "||" + Preparations for the picnic tours

பரிசல் பயணம், அருவியில் குளியல் இன்பச் சுற்றுலாவுக்கு ஏற்ற பரளிக்காடு

பரிசல் பயணம், அருவியில் குளியல் இன்பச் சுற்றுலாவுக்கு ஏற்ற பரளிக்காடு
கோவை என்றாலே நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது நீலகிரி மற்றும் ஊட்டிதான்.
கோவையிலேயே மனதை மயக்கும் சுற்றுலாப் பகுதிகள் பல உள்ளன என்பது பலருக்கும் தெரிவதில்லை. இம்முறை கோடை விடுமுறைக்கு கோயம்புத்தூருக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடுங்கள். அங்குள்ள மலைவாழ் மக்களின் அறுசுவை உணவு, பரிசல் பயணம், மனதை மயக்கும் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பகுதிகளை பார்த்து ரசிக்கலாம்.

கோவையைச் சுற்றி பல மலைப்பகுதிகள் உள்ளன. இங்கு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மலை கிராமங்களில் சுற்றுலா செல்லுங்கள். உங்களது சுற்றுலாவை இன்பச் சுற்றுலாவாக, என்றென்றும் நினைவில் நிற்கும் பயணமாக அது நிச்சயம் அமையும். நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ள பல மலை கிராமங்களில் ஏரிகள் பல உள்ளன.

கோவை குற்றாலம்

பொலம்பட்டி வனச் சரக பகுதி மிகஅழகிய இயற்கை எழில் கொஞ்சும் பிராந்தியமாகும். இங்கு அருவிகள் அதிகம். பசுமை சூழ்ந்த இந்த பகுதியானது சுற்றுச் சூழல் காப்பு வனப் பகுதியாகும். இங்குள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் மாலை 4 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவர். இங்கு சாடிவாயல் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஷான்ஸ் எனப்படும் மரக் குடிலில் சுற்றுலாப் பயணிகள் தங்கலாம். கோவையிலிருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாடிவாயல் கிராமம். இங்கு செல்வதற்கு நகர பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

கோவை குற்றாலம் எனப்படும் அருவியில் குளிப்பது மிகவும் உற்சாகம் தரும் அனுபவம். இங்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த அருவியில் குளிக்க நபருக்கு ரூ.15, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5, கார்களுக்கு ரூ.15-ம், பேருந்துகளுக்கு ரூ.50-ம் நிறுத்தக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சிலீரென விழும் அருவியில் குளிப்பது மிகவும் உற்சாகமான அனுபவமாகும். அருவியில் குளிக்கும்போது எப்போதாவது சில வன விலங்குகளும் நீர் பருக இப்பகுதிக்கு வரும். ஆற்றைக் கடப்பது, கயிறு மூலம் செல்வது, மரக் குடிலில் தங்குவது போன்ற வசதிகளும் இங்கு உண்டு. இங்கு குழந்தைகள் விளையாடுவதற்கான பூங்காவும் உள்ளது.

பரளிக்காடு பரிசல் பயணம்

இங்குள்ள மலைப்பகுதி மக்களின் அனுபவத்தை நீங்கள் பரிசல் பயணத்தின்போது நேரில் காணலாம். காரமலை வனச் சரக பகுதியில் அமைந்துள்ள பரளிக்காடு பகுதியில் ஆற்றைக் கடக்கும் பரிசல் பயணம் திகில் நிறைந்த சுகானுபவமாக நிச்சயம் இருக்கும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பரிசல் இயக்கப்படுகிறது. ஏறக்குறைய 10 பரிசல்கள் உள்ளன. ஒரு பரிசலுக்கு நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பவானி ஆற்றின் தண்ணீர் இங்கு வருகிறது. பரிசலில் பயணிக்கும்போதே இங்குள்ள மலைவாழ் மக்களுடன் உரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். அதேபோல மலை வாழ் மக்களின் உணவான கேழ்வரகு உருண்டை, மீன் கறி, காய்கறி சாலட், சப்பாத்தி குருமா உள்ளிட்ட மலைவாழ் உணவுகளை நீங்கள் சாப்பிடலாம். பல வகை சாதம், தயிர்சாதம் உள்ளிட்டவையும் மிகவும் சுகாதாரமான முறையில் இங்கு வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழு மூலம் நடத்தப்படும் கேன்டீனில் உணவு தயாரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.

அருவியில் குளியல், பரிசல் பயணத்தைத் தொடர்ந்து மலையேற்றத்துக்கான வாய்ப்பும் இங்கு கிடைக்கும். இவை அனைத்தும் வார இறுதி நாள்களில் மட்டுமே நடைபெறும். எனவே வார இறுதி நாள்களில் மட்டுமே இங்கு சுற்றுப் பயணம் செய்ய திட்டமிடுங்கள். பரளிக்காடு வனச் சரக பகுதியில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு ரூ.300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றி 6 வனச் சரக பிராந்தியங்கள் உள்ளன. இவை அனைத்துமே இயற்கை காடாகும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வனத்துறையினர் கட்டுப்பாட்டில் சூழல் சுற்றுலா இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வனத்துறையினர்கட்டுப்பாட்டில் பழங்குடி மக்களால் நடத்தப்படும் ஒரே சூழல் சுற்றுலா தலமும் இதுவே. பரளிக்காடு சுற்றுலா செல்லும்முன்பு ஒரு வாரத்துக்கு முன்பாகவே அப்பகுதி வனச்சரகரிடம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.


அதிகம் வாசிக்கப்பட்டவை