சிறந்த ஏ.சி.யை தேர்ந்தெடுப்பது எப்படி?
கோடை காலம், அதிலும் கோடையின் உக்கிரத்தை உணர்த்தும் அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டது.
தமிழகத்தின் அனைத்து கோடை வாசஸ்தலங்களில் விடுமுறைக்குக் கூடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலா சென்றாலும் மீண்டும் வீட்டுக்கு திரும்பவும் வரவேண்டும் அல்லவா. விடுமுறை நாட்களை வீட்டில் கழிக்க ஏ.சி.க்கள் அவசியமாகின்றன. நகர்ப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் இப்போது ஏ.சி. அத்தியாவசிய பொருளாகிவருகிறது. கடந்த முறை வாங்காதவர்களும் இப்போது வாங்க வேண்டும் என்ற உத்வேகத்தில் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர்.
ஏ.சி.க்களை மாட்டித் தரும் பணியில் பம்பரமாக சுழன்று பணியாற்றுகின்றனர் ஏ.சி. மெக்கானிக்குகள். கோடை காலத்தில் இவர்களுக்கு ஏக டிமாண்ட் என்பதை சொல்லத் தேவையில்லை. ஏ.சி. வாங்குவதாக இருந்தால் நீங்கள் சில அடிப்படையான விஷயங்களை தெரிந்து கொண்டு சென்றால் மிகச் சிறந்த ஏ.சி.யை வாங்க முடியும். பொதுவாக ஏ.சி.க்களில் இதுவரை இரண்டு மாடல்கள் இருந்தன. அதாவது ஸ்பிளிட் ஏ.சி. மற்றும் விண்டோ ஏ.சி. தற்போது மூன்றாவதாக போர்டபிள் ஏ.சி.க்களும் வந்துவிட்டன.
இன்வர்டர் ஏ.சி.க்கள் என்பதும் சந்தையில் அதிகரித்து வருகின்றன. இவற்றின் பயன் என்ன. எது சிறந்தது என்பதைப் பார்க்கலாம். மார்ச் முதல் ஆகஸ்டு வரை தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நீடிக்கும். எனவே ஏ.சி.க்கள் அவசியமாகிறது.
வெளிப்புறத்தில் வெயில் தகித்தாலும், அதன் தாக்கம் உங்கள் அறையில் பாதிப்பை ஏற்படுத்தாமல், அறையை குளிர்ச்சிப்படுத்த உதவுவது ஏ.சி.க்கள் தான். உங்களுக்கு ஏற்ற அளவில் குளிர்ச்சியை கட்டுப்படுத்தும் வசதி உங்கள் கைகளிலேயே இருப்பது இதன் சிறப்பு. ஏறக்குறைய உங்கள் வீட்டில் உள்ள ரெப்ரிஜிரேட்டர் எப்படி அந்த பெட்டியை குளிர்விக்கிறதோ அதைப் போல உங்கள் அறையைக் குளிர்விக்க உதவுகின்றன ஏ.சி.க்கள்.
ஸ்பிளிட் ஏ.சி.
அதாவது ஏ.சி. சாதனம் இரு பிரிவாக பிரிக்கப்பட்டதைக் காட்டுவதுதான் ஸ்பிளிட் ஏ.சி. குளிர்விக்கும் சாதனம் தனியாகவும், அதற்கான மோட்டார் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய பகுதி தனியாகவும் இருக்கும். இதனால் ஸ்பிளிட் ஏ.சி.க்கள் செயல்படும்போது அதன் சப்தம் கேட்காது. இதனால் படுக்கையறைகளுக்கு மிகவும் ஏற்றது ஸ்பிளிட் ஏ.சி.க்களே. அறைக்கு மிக அழகிய தோற்றப் பொலிவையும் இவை அளிக்கும். ஆனால் விண்டோ ஏ.சி.க்களை விட இவை விலை அதிகமானது. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு ஸ்பிளிட் ஏ.சி. பரிந்துரைக்கப்படுவதில்லை. காரணம் வீடு மாற்றும்போது இதை கழற்றி மாட்டுவது கடினம், செலவு பிடிக்கும். காரணம் இதை கழற்றி மாற்றினால் நிச்சயம் குளிர்விக்கும் வாயுவை (ஹீலியம்) நிரப்ப வேண்டியிருக்கும்.
விண்டோ ஏ.சி.
ஒரே பெட்டி, அதுவும் ஜன்னலில் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதை நிறுவுவது எளிது. அதேபோல கழற்றி மாட்டுவதும் எளிது. வேறிடங்களுக்கு மாற்றினாலும் இதற்கு வாயு நிரப்ப வேண்டிய தேவை இருக்காது.
போர்டபிள் ஏ.சி.
இது ஏர் கூலரைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலை நாடுகளில் மிகவும் பிரபலம். தற்போது இந்தியாவில் இது ஒரு சில நகர்களில் எளிதாகக் கிடைக்கிறது. முன்னணி நிறுவனங்களில் ஒரு சில மட்டுமே போர்டபிள் ஏ.சி.க்களை உருவாக்கிஉள்ளன. இதை நிறுவுவது எளிது.
அதேபோல உங்கள் தேவைக்கேற்ப இதை நகர்த்திக் கொள்ள முடியும். ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு இதை மாற்ற முடியும்.
எது சரியான அளவு
பொதுவாக ஏ.சி.வாங்க திட்டமிடும்போதே சரியான அளவிலானதை வாங்குவதே நல்லது. 80 சதுர அடி அளவிலான அறைக்கு 0.75 டன் ஏ.சி. போதும். 80 சதுர அடி முதல் 120 சதுர அடி வரையிலான அறைக்கு 1 டன் போதும். 120 சதுர அடி முதல் 190 சதுர அடி வரையிலான அறைக்கு 1.5 டன் போதுமானது. 190 சதுர அடி முதல் 300 சதுர அடி வரையிலான அறைக்கு 2 டன் ஏ.சி. போதுமானது.
உங்கள் அறையின் அளவுக்கு ஏற்றதை தேர்வு செய்யுங்கள். 3 நட்சத்திர குறியீட்டுக்கு மேல் சான்று பெற்ற ஏ.சி.க்களை வாங்குங்கள். இவை மின்சாரத்தை சேமிக்கும். அனைத்துக்கும் மேலாக இன்வெர்டர் ஏ.சி.க்கள் மின் சேமிப்புக்கு மிகவும் உதவியாக உள்ளன. இத்தகைய ஏ.சி.க்களை வாங்குவதும் சிறந்ததே.
Related Tags :
Next Story