போலீசார் மிரட்டுவதாக கூறி தி.மு.க. பிரமுகர் தற்கொலை உருக்கமான வீடியோவால் பரபரப்பு
ஆத்தூரில் போலீசார் வழக்கு போடுவதாக கூறி மிரட்டுவதாக வீடியோ வெளியிட்டு, தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 49). தி.மு.க. பிரமுகரான இவர் நிதி நிறுவனமும் நடத்தி வந்தார். இவரிடம் பலர் பணம் பெற்றுக்கொண்டு திருப்பி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 13–ந் தேதி ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரில், பிரேம்குமாரிடம் தான் கடன் வாங்கி இருந்தேன். ஆனால் அவர் என்னிடம் கந்துவட்டி கேட்டு கொடுமை செய்ததுடன், சாதியை சொல்லி திட்டினார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகார் தொடர்பாக, ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் கேசவன் ஆகியோர் பிரேம்குமாரையும், அவரது தம்பியான தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் செந்தில் குமாரையும் அழைத்து விசாரணை நடத்தினர். பின்னர் அந்த ஆட்டோ டிரைவரிடம் எழுதி வாங்கிய கடன் தொடர்பான ஆவணங்களை திருப்பி கொடுப்பதுடன், அவரை பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது எனவும் பிரேம்குமாரிடம் போலீசார் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சாதியை சொல்லி திட்டியதாக ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தர வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் மிரட்டுவதாக பிரேம்குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை தனது நண்பர்கள் மற்றும் பல்வேறு வாட்ஸ்–அப் குழுக்களில் கடந்த 14–ந் தேதி பதிவிட்டார்.
மேலும் அந்த பதிவில் தன்னிடம் கடன் வாங்கியவர் ஏமாற்றிய நிலையில், போலீசாரும் பணம் கேட்டு மிரட்டுவதால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று பேசி இருந்தார். இந்த வீடியோவை பதிவிட்ட அவர், அன்று காலை விவசாயத்திற்கு பயன்படும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பிரேம்குமார் நேற்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள், நண்பர்கள் அந்த தனியார் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். பின்பு அவரது உடலை வாங்க மறுத்தனர். அப்போது அவர்கள், பிரேம்குமார் இறப்பதற்கு முன்பு பேசி வெளியிட்ட வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் மீதும், போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பிற்பகல் 3 மணி வரை இந்த போராட்டம் நடந்தது. இந்த தகவலை அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆத்தூருக்கு விரைந்து வந்தார். அவர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அப்போது பிரேம்குமாரின் சாவுக்கு காரணமான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் அவரது உடலை பெற்று செல்வோம் என உறவினர்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து அவரிடம் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியவர்கள், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது புகார் கொடுங்கள், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் உறுதி கூறினார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் புகார் மனு அளித்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு உறுதி கூறியதை அடுத்து பிரேம்குமாரின் உறவினர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் நிருபர்களிடம் கூறும்போது, ‘புகார் மனுவில் கூறப்பட்டுள்ள நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலீசார் தவறு செய்திருந்தால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
இறந்த பிரேம்குமாருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், அரவிந்தன், கோகுல் என 2 மகன்களும் உள்ளனர்.
கடனை வாங்கியவர்கள் திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிய நிலையில், போலீசாரும் வழக்குப்பதிவு செய்வதாக கூறி மிரட்டியதாக கூறி வீடியோ வெளியிட்டு தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.