மாவட்ட செய்திகள்

ஊட்டியில் மலர் கண்காட்சி, குற்ற சம்பவங்களை தடுக்க 5 தனிப்படைகள் அமைப்பு - ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு + "||" + In Ooty Flower Show, To prevent incidents of crime 5 separate forces

ஊட்டியில் மலர் கண்காட்சி, குற்ற சம்பவங்களை தடுக்க 5 தனிப்படைகள் அமைப்பு - ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு

ஊட்டியில் மலர் கண்காட்சி, குற்ற சம்பவங்களை தடுக்க 5 தனிப்படைகள் அமைப்பு - ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு
ஊட்டியில் மலர் கண் காட்சியையொட்டி குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா நேற்று ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊட்டி,

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர் கண்காட்சி நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. இதனை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார். ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேற்கு மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி. மேற்பார்வையில் தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீசார் 3 பட்டாலியன், 2 போக்குவரத்து யூனிட் மற்றும் உள்ளூர் போலீசார் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

ஊட்டியில் அனைத்து இடத்திலும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது, குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகன விபத்து எதுவும் நடக்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊட்டி-குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மலைப்பாதையில் புதியதாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு, 35 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம்-குன்னூர்-ஊட்டி சாலை, ஊட்டி-கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. ஊட்டிக்கு சுற்றுலா வரும் வாகனங்களை நிறுத்த காந்தி விளையாட்டு மைதானம், ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானம், என்.சி.எம்.எஸ். வளாகம், பழங்குடியினர் பண்பாட்டு மையம், அசெம்பிளி தியேட்டர் வளாகம் உள்ளிட்ட இடங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தாவரவியல் பூங்கா சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளது.

ஊட்டியில் முதல் முறையாக பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஆளில்லா குட்டி விமானம் பயன்படுத்தப்பட உள்ளது. நாளை முதல் 22-ந் தேதி வரை 5 ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் குற்ற தடுப்பு, போக்குவரத்து நெரிசலை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கலாம். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்கள், வாகன நிறுத்துமிடங்கள், எந்த வழியாக செல்ல வேண்டும், ஒரு வழிப்பாதை, இரு வழிப்பாதை, நகராட்சி சாலை போன்றவை குறித்த வரைபடம் அடங்கிய ஒளிரும் தகவல் பலகை சேரிங்கிராஸ் சந்திப்பில் வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அதனை பார்த்து தெரிந்து கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறு இன்றி செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். நீலகிரி மாவட்ட காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு தம்பிதுரை, ஊட்டி நகர போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு சேரிங்கிராஸ் புறக்காவல் நிலையத்தில் பதிவாகும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஊட்டியில் கோடை சீசனையொட்டி, போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
ஊட்டியில் கோடை சீசனையொட்டி போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா ஆய்வு செய்தார்.