கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி விவசாயி பலி; இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்றபோது விபரீதம்
கொடுமுடி காவிரி ஆற்றில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியானார்.
கொடுமுடி,
கிருஷ்ணகிரி மாவட்டம் அனுமன்தீர்த்தம் என்ற ஊரைச்சேர்ந்த 2500 பேர், திண்டுக்கல் மாவட்டம் மதுக்கரை செல்லாண்டி அம்மன் கோவிலுக்கு தீர்த்தக்காவடி எடுப்பதற்காக ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு நேற்று முன்தினம் வந்தார்கள். இவர்களுடன் அதே ஊரைச்சேர்ந்த விவசாயி செல்லக்குமார் (வயது 53). என்பவரும் வந்தார்.
இந்தநிலையில் நேற்று பகல் 12.45 மணி அளவில் அனைவரும் காவடிக்கு சிறப்பு பூஜை செய்வதற்காக கொடுமுடி மணல்மேடு காவிரி ஆற்றுக்கு சென்றார்கள்.
ஆற்றில் அனைவரும் குளித்துவிட்டு கரையில் காவடியை அலங்கரித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போது செல்லக்குமார் தனக்கு நீச்சல் தெரியும் என்பதால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு நீந்திச்சென்றார். பின்னர் மீண்டும் இக்கரைக்கு நீந்தி வந்தார். அப்போது கை, கால்கள் சோர்வடைந்ததால் அவரால் நீந்த முடியவில்லை. இதனால் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். உடன் வந்தவர்கள் இதை பார்த்து உடனே தண்ணீரில் குதித்து அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்கள்.
அதன்பின்னர் 108 ஆம்புலன்சை வரவழைத்து கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு செல்லக்குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த செல்லக்குமாருக்கு தமிழ்செல்வி (50) என்ற மனைவியும், வெற்றிவேல் (21) என்ற மகனும் உள்ளனர். தமிழ்செல்வி அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.