கல்வராயன்மலையில் விபத்து, மினிலாரி பள்ளத்தில் பாய்ந்தது, பெண் உள்பட 2 பேர் பலி


கல்வராயன்மலையில் விபத்து, மினிலாரி பள்ளத்தில் பாய்ந்தது, பெண் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 9:13 PM GMT)

கல்வராயன்மலையில் மினிலாரி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

கச்சிராயப்பாளையம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள சித்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி(வயது 50). இவருடைய உறவினரான விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலை எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த தீர்த்தன் என்பவர் நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆண்டி சித்தம்பட்டி, வேலம்பட்டு ஆகிய கிராமங்களை சேர்ந்த உறவினர்கள் 24 பேருடன் ஒரு மினிலாரியில் எருக்கம்பட்டுக்கு நேற்று காலை வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் துக்க நிகழ்ச்சியை முடித்து விட்டு மாலை சொந்த ஊர்களுக்கு மினிலாரியில் புறப்பட்டனர். மினிலாரியை சித்தம்பட்டியை சேர்ந்த சக்திவேல்(30) என்பவர் ஓட்டினார்.

எருக்கம்பட்டு-மோட்டுவளவு என்ற இடத்தில் தரைப்பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்தது.

இதில் ஆண்டி, வேலம்பட்டை சேர்ந்த ஆண்டி மனைவி சடையச்சி(45) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மினிலாரியில் வந்த பாப்பாத்தி(45), உண்ணாமலை(55), ஈஸ்வரி(30), வெள்ளையன்(58), ஜெயராமன்(60), கஸ்தூரி(24), வெள்ளையம்மாள்(50) உள்பட 23 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய மினிலாரி டிரைவர் சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்த 23 பேரையும் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் பலியான ஆண்டி, சடையச்சி ஆகியோரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பியபோது மினிலாரி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story