மாவட்ட செய்திகள்

தொடரும் உயிர்பலியை தடுக்க பி.ஏ.பி.வாய்க்காலில் குளிக்க தடை விதிக்கப்படுமா? + "||" + Will a ban on bathing on the PAP channel cancellation block to prevent the ongoing life cycle?

தொடரும் உயிர்பலியை தடுக்க பி.ஏ.பி.வாய்க்காலில் குளிக்க தடை விதிக்கப்படுமா?

தொடரும் உயிர்பலியை தடுக்க பி.ஏ.பி.வாய்க்காலில் குளிக்க தடை விதிக்கப்படுமா?
தொடரும் உயிர்பலியை தடுக்க பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொங்கலூர்,

கரைபுரண்டு ஓடும் வெள்ளத்திலும் கரை சேர்ந்தவர்கள் ஏராளம். ஆனால் குறைந்த அளவு தண்ணீர் சென்றாலும் பி.ஏ.பி. வாய்க்கால் உயிர்களை காவு வாங்குவது கவலை அளிப்பதாக உள்ளது. பி.ஏ.பி.வாய்க்காலில் செல்லும் தண்ணீரை பார்த்ததும் குளிக்க வேண்டும் என்று ஆசையில் குதித்தால் அதுவே வாழ்க்கையின் கடைசியாகி விடுகிறது.


உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பகுதிகளுக்கு பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெற்று வருகிறது. இதற்காக திருமூர்த்தி அணையில் இருந்து வெள்ளகோவிலை அடுத்த குருக்கத்தி வரை பெரிய மற்றும் சிறிய அளவிலான வாய்க்கால்கள் உள்ளது. இதில் பிரதான வாய்க்கால் மட்டும் 125 கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த பிரதான வாய்க்காலில் தண்ணீர் வரும்போது அந்த பகுதிகளில் உள்ளவர்கள் குளிப்பதும், துணி துவைப்பதும் தினசரி வாடிக்கை. இதில்தான் பிரச்சினையே உருவாகிறது.

காரணம் படிகளில் நின்று கொண்ட பெண்கள் துணி துவைக்கிறபோது கால் தவறி உள்ளே விழுந்து விடுகிறார்கள். துணி துவைக்க வரும்போது தங்களுடன் அழைத்து வரும் தங்கள் குழந்தைகளை படியில் அமர வைத்து விட்டு துணி துவைக்கிறார்கள். அப்போது குழந்தைகள் தண்ணீரில் விளையாடிக்கொண்டிருக்கும்போது தவறி உள்ளே விழுந்தும் உயிரிழப்புகள் நடந்துள்ளது. மேலும் தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

எனவே மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு வீட்டிற்கு தெரியாமல் வாய்க்கால்களில் குளிக்க வருகிறார்கள். அப்படி வரும் மாணவர்களில் பலருக்கு நீச்சல் தெரிவதில்லை. நீச்சல் தெரிந்த தங்களது நண்பர்கள் வாய்க்காலின் உள்ளே இறங்கி குளிப்பதும், கரையில் இருந்து டைவ் அடிப்பதையும் பார்த்து நீச்சல் தெரியாத மாணவர்கள் ஆர்வத்தின் காரணமாக படியில் இருந்து சற்று உள்ளே இறங்கி குளிக்கும்போது எதிர்பாராத விதமாக தண்ணீர் இழுத்துச்சென்று விடுகிறது.

நீச்சல் தெரியாத மாணவர்களை காப்பாற்ற செல்லும்போது அவர்கள் பயத்தில் காப்பாற்ற செல்கிறவர்களை கெட்டியாக பிடித்துக்கொள்கிறார்கள். அப்போது காப்பாற்ற செல்கிறவர்கள் சத்தம்போட்டுக்கொண்டே அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொண்டால் போதும் என்று வந்து விடும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடந்துள்ளது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக அளவில் உயிரிழந்துள்ளனர்.

எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கோடை விடுமுறை சமயங்களில் நீச்சல் கற்றுக்கொடுக்க முன்வரவேண்டும். கடந்த காலங்களில் கிணறுகளில் தண்ணீர் நிறைந்து காணப்படும். கோடை விடுமுறை என்றாலே நீச்சல் கற்றுக்கொள்வது பிரதானமாக இருந்தது. ஆனால் இன்று பெரும்பலான கிணறுகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. எங்கு பார்த்தாலும் ஆழ்குழாய் கிணறுகளாகவே காணப்படுகிறது. எனவே மாணவர்கள் தண்ணீரில் குளிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் வாய்க்கால்களை தேடி வருகிறார்கள்.

அதுமட்டும் அல்ல பி.ஏ.பி. வாய்க்கால் பகுதி தற்போது மதுப்பிரியர்களின் திறந்த வெளி பாராக மாறிவருகிறது. வாய்க்கால் கரைகளில் பலர் அமர்ந்து கொண்டு மது அருந்தும் செயல் அதிகரித்து வருகிறது. அப்படி வருபவர்கள் உணவு வகைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களையும் வாங்கி வருகிறார்கள். இவர்கள் வாய்க்கால்களின் கரைகளில் மரத்தின் கீழ் அமர்ந்து மது குடித்துவிட்டு போதையில் வாய்க்கால்களில் குதித்து விளையாடி வருகிறார்கள். இவர்கள் செய்யும் சேட்டைகளை பார்த்து அருகில் உள்ள தோட்டத்தின் உரிமையாளர்கள் சத்தம்போட்டால் அவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்வதுடன், தகராறிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் அவர்கள் வாங்கி வரும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், டம்ளர்கள் மற்றும் காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு செல்வது பெரும் பிரச்சினையை உருவாக்கி வருகிறது. இவ்வாறு மது அருந்திவிட்டு வாய்க்காலில் குளித்தால் போதையில் உயிழப்பு ஏற்படுகிறது. எனவே தொடரும் உயிரிழப்புகளை தடுக்க பி.ஏ.பி.வாய்க்காலில் குளிக்க தடை விதிக்கப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.