குளித்தபோது சம்பவம்: பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி இருசக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் பலி
குண்டடம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்தபோது இருசக்கர வாகன ஷோரூம் உரிமையாளர் தண்ணீரில் மூழ்கி பலியானார். மேலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உள்பட 2 பேரின் கதி என்ன? என்று தெரியவில்லை.
பொங்கலூர்,
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருடைய மகன் கார்த்திக் கண்ணன் (வயது 32). இவர் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகன ஷோரூம் வைத்திருந்தார். அதே ஊரை சேர்ந்த இவருடைய நண்பர் கோபி கிருஷ்ணன் (32) மற்றும் சக்தி (32). இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள நண்பரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து குளிப்பதற்காக 30 கிலோ மீட்டர் தொலைவில் பல்லடம் அருகே வி.கள்ளிபாளையம் பகுதியில் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலுக்கு சென்றுள்ளனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளை வாய்க்கால் அருகே நிறுத்தி விட்டு, 3 பேரும் வாய்க்காலில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார்த்திக் கண்ணனும், கோபி கிருஷ்ணனும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த சக்தி அவர்களை காப்பாற்ற முயன்றார். ஆனால் தண்ணீரின் வேகத்திற்கு ஈடுகொடுத்து அவரால் காப்பாற்ற முடியவில்லை. அதற்குள் இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மூழ்கினர்.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கும், பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசாரும் தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து சென்று கார்த்திக் கண்ணனையும், கோபி கிருஷ்ணனையும் தேடினார்கள். அப்போது அவர்கள் குளித்துக்கொண்டிருந்த சற்று தொலைவில் கார்த்திக் கண்ணன் இறந்த நிலையில் அவருடைய உடல் மீட்கப்பட்டது. ஆனால் கோபி கிருஷ்ணன் கதி என்ன? என்று தெரியவில்லை. தன் கண் முன்னே நண்பர்களை தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவத்தை பார்த்த சக்தி அழுதது பரிதாபமாக இருந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திக் கண்ணன் உடலை பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போல் மற்றொரு சம்பவத்தில் நண்பருடன் குளிக்க சென்ற என்ஜினீயரிங் மாணவரும் தண்ணீரில் மூழ்கினார். இது பற்றிய விவரம் வருமாறு;–
பொங்கலூர் அருகே உள்ள சக்திநகரை சேர்ந்தவர் ரவணப்பெருமாள்சாமி. இவருடைய மனைவி தனலட்சுமி. இவர்களுடைய மகன் ஜெயவேல் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–வது ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு சொந்தமான விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த, ஜெயவேல் நேற்று ஊருக்கு வந்தார்.
பின்னர் மாலையில் தனது நண்பர் ராகவன் (21) என்பவருடன் பொங்கலூர் அருகே உள்ள பி.ஏ.பி. வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். ராகவனுக்கு நீச்சல் தெரியும் என்பதால் அவர் வாய்க்காலின் உள்ளே டைவ் அடித்து குளித்தார். ஆனால் ஜெயவேலுக்கு நீச்சல் தெரியாது என்பதால், வாய்க்காலில் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஜெயவேல் தண்ணீருக்குள் விழுந்தார். தற்போது பி.ஏ.பி. வாய்க்காலில் தண்ணீர் வேகமாக சென்று கொண்டிருந்ததால், ஜெயவேலை தண்ணீர் இழுத்து சென்றது. உடனே அவர் ‘‘காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்’’ என்று கூச்சல் போட்டார். உடனே ராகவன், தண்ணீருக்குள் குதித்து அவரை காப்பாற்ற முயன்றார். ஆனால் அதற்குள் ஜெயவேல் தண்ணீருக்குள் மூழ்கினார்.
உடனே இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கும், பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படை வீரர்களும், போலீசாரும் விரைந்து சென்று, ஜெயவேலை தேடினார்கள். ஆனால் அதற்குள் இரவுநேரம் ஆகி விட்டதால் தேடுதல் பணியை தற்காலிகமாக கைவிட்டனர். இதனால் ஜெயவேலின் கதி என்ன? என்று தெரியவில்லை. இன்று (வியாழக்கிழமை) மீண்டும் ஜெயவேலையும், கோபி கிருஷ்ணனையும் தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் ஈடுபட உள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பி.ஏ.பி.வாய்க்காலில் குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.