மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், பொதுமக்கள் வலியுறுத்தல்


மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 May 2019 10:45 PM GMT (Updated: 15 May 2019 9:43 PM GMT)

மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறை கட்டிட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை,

மானாமதுரையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மானா மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்டுவதற்கு பெற்றோர்கள் சார்பில் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து தமிழக அரசின் சார்பில் இந்தப் பள்ளிக்கு கூடுதலாக 18 வகுப்பறை கட்டிடங்கள், 2 ஆய்வகங்கள், 4 கழிப்பறைகள் உள்ளிட்டவை கட்டுவதற்கு ரூ.3 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது.

தரமான பொருட்களை கொண்டு கட்டிடப்பணிகள் நடைபெறவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அதன் பின்னர் இந்த கட்டிடப் பணிகள் தொடங்கின.

இந்த கட்டுமான பணிகள் சுமார் 6 மாதத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில் இன்று வரை 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை.

இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது:-

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு குறைவான நாட்களே உள்ள நிலையில், இந்த கட்டுமான பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது வேதனையை தருகிறது.

இதனால் புதிய கல்வியாண்டில் கல்வி கற்க வரும் மாணவிகள் பெரிதும் அவதியடையும் நிலை உள்ளது.

தற்போது இந்த ஆண்டு மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் இந்த கட்டுமான பணிகளை விரைந்து முடித்தால் அவை மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கனவே இந்த பள்ளியில் இடப்பற்றாக்குறையாக உள்ளது. தற்போது இந்த புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் மந்த கதியில் நடந்து வருவதால் இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் பெரிதும் சிரமம் அடையும் நிலை ஏற்படும். மேலும் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் இட நெருக்கடி காரணமாக மாணவிகள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story