மயிலாடுதுறையில் 26 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம் உதவி கலெக்டர் நடவடிக்கை


மயிலாடுதுறையில் 26 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம் உதவி கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 9:46 PM GMT)

மயிலாடுதுறையில் தர ஆய்வின்போது உதவி கலெக்டர் நடவடிக்கையின் பேரில் 26 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.

மயிலாடுதுறை,

தமிழக அரசு உத்தரவுப்படி குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளி வாகனங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மயிலாடுதுறை, சீர்காழி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள தனியார் பள்ளிகளை சேர்ந்த வாகனங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினர். அதன்படி மயிலாடுதுறை அருகே மேலையூரில் உள்ள அழகுஜோதி அகடமி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி வாகனங்களை மயிலாடுதுறை உதவி கலெக்டர் கண்மணி தலைமையிலான குழுவினர் தர ஆய்வு செய்தனர்.

அப்போது பள்ளி வாகனங்களின் இயக்கம் நன்றாக உள்ளதா? வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும், வாகனங்களின் முகப்பு பக்கவாட்டில் பள்ளியின் பெயர், வாகனங்களின் எண், வாகனங்களில் தீயணைப்பான்கள், தளம், ஏறி-இறங்கும் படிக்கட்டுகள், கதவுகள், அவசர வழி கதவுகள், மாணவர்களின் புத்தக பைகள் வைக்கும் இடங்கள், இருக்கைகள், வேக கட்டுப்பாட்டு கருவி, டிரைவர்களின் தகுதி, உரிமம், அனுபவம், ஓட்டுனர் உதவியாளரின் தகுதி, வாகனங்களின் அனுமதி சான்று, நடப்பில் உள்ள காப்பீட்டு சான்று, மாசு கட்டுப்பாட்டு தர சான்று போன்றவைகள் குறித்து தர ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

தகுதி நீக்கம்

தர ஆய்வு செய்யப்பட்ட 284 வாகனங்களில், 26 வாகனங்களில் சிறுகுறைபாடுகள் இருந்ததால், அந்த வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களில் உள்ள குறைகளை சரி செய்து மீண்டும் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தகுதி சான்று பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி கூறுகையில், பள்ளி நிர்வாகத்தினர் டிரைவர்களை பணியமர்த்தும்போது அவர்கள் குற்ற வழக்கு நிலுவையில் இல்லாத சான்று போலீஸ் துறையிடம் இருந்து பெற்று வர வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும் என்றார்.

ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சண்முகவேல், ராம்குமார், மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story