காரில் கடத்த முயன்றபோது இளம்பெண் பலி: 5 நாட்களுக்கு பிறகு உடல் அடக்கம்


காரில் கடத்த முயன்றபோது இளம்பெண் பலி: 5 நாட்களுக்கு பிறகு உடல் அடக்கம்
x
தினத்தந்தி 15 May 2019 10:30 PM GMT (Updated: 15 May 2019 9:53 PM GMT)

தரங்கம்பாடி அருகே காரில் கடத்த முயன்றபோது இளம்பெண் பலியானார். அவரது உடல் 5 நாட்களுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

பொறையாறு,

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கேசவன்பாளையம் கிராமத்தை சேர்ந்த மதியழகன் மகள் கவியரசி (வயது 20). இவர் தனது தங்கை மற்றும் தோழிகளுடன் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தேவனாம்பாளையத்தில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த அவரும், அவருடைய தோழிகளும் கோவை செல்வதற்காக கடந்த 6-ந் தேதி கேசவன்பாளையத்தில் இருந்து தரங்கம்பாடி பஸ் நிலையத்துக்கு நடந்து சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த மர்ம கும்பல், திடீரென கவியரசியை தரதரவென இழுத்து காரில் கடத்தி செல்ல முயற்சித்தது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கவியரசி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 11-ந் தேதி கவியரசி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொறையாறு போலீசார் விபத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். யாரையும் கைது செய்யவில்லை.

முற்றுகை

கவியரசி மரணம் குறித்து விபத்து வழக்குப்பதிவு செய்த போலீசாரை கண்டித்தும், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க வலியுறுத்தியும் கடந்த 12-ந் தேதி அப்பகுதி கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர் பொறையாறு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் குற்றவாளிகளை கைது செய்வதாக போலீசார் உறுதி அளித்தனர். ஆனால் உறவினர்கள், குற்றவாளிகளை கைது செய்யும் வரை கவியரசியின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி கலைந்து சென்றனர். இதனால் கவியரசியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது.

பேச்சுவார்த்தை

இந்தநிலையில் கவியரசியின் தந்தை மதியழகன் மற்றும் உறவினர்களுடன் பொறையாறு போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வந்தனா, சாமிநாதன், வெங்கடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சிங்காரவேல், தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், வடிவழகன், தரங்கம்பாடி வட்டார கிராம அம்பேத்கர் கூட்டமைப்பு தலைவர் செல்வம், செயலாளர் டாக்டர் தேவசகாயம், மற்றும் கேசவன்பாளையம் நாட்டாண்மைகள், பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

உடல் அடக்கம்

கூட்டத்தில் விரைவில் குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தாசில்தார் மூலம் இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய இழப்பீடு பெற்று தருவது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 5 நாட்களாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கவியரசியின் உடலை, உறவினர்கள் கேசவன்பாளையம் கிராமத்துக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்.

சம்பவ இடத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது:-

கவியரசி இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story