ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில், மல்லிகை பூ விலை வீழ்ச்சி - கிலோ ரூ.80-க்கு விற்பனை
ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் மல்லிகை பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மல்லிகைப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பூக்கள், ஆண்டிப்பட்டி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஆண்டிப்பட்டி மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 800 கிலோ வரை பூக்கள் விற்பனைக்கு வருகிறது.
கடந்த வாரம் வரை மல்லிகைப்பூ விலை உயர்ந்து காணப்பட்டது. அதாவது ஒரு கிலோ பூ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஆண்டிப்பட்டி மார்க்கெட்டுக்கு மல்லிகை பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 3 டன் பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக மல்லிகைப்பூ விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஆண்டிப்பட்டி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். மழையில்லாமல் ஏற்கனவே விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மல்லிகைப்பூவுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர். தற்போது கிடைக்கும் விலை பூக்களை பறிக்கும் ஆட்களுக்கு கூலி கொடுப்பதற்கு கூட போதுமானதாக இருப்பதில்லை என்று விவசாயிகள் புலம்புகின்றனர். ஆண்டிப்பட்டி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்துள்ள நிலையில், வாசனை திரவிய தொழிற்சாலைக்கு குறைந்த விலைக்கு மல்லிகைப்பூக்களை வாங்கி செல்கின்றனர்.
எனவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மல்லிகைப்பூக்களுக்கு நிலையான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் வாசனை திரவிய தொழிற்சாலையை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story