இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதி வாக்காளர்கள்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு


இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதி வாக்காளர்கள்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 15 May 2019 11:15 PM GMT (Updated: 15 May 2019 10:34 PM GMT)

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளின் வாக்காளர்கள்தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள் என்று திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை,

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நேற்று மாலையில் தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின், விரகனூர், மேலஅனுப்பானடி, வில்லாபுரம், வலையங்குளம் பகுதியில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:–

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் உறுதியோடு நீங்கள் எங்கள் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து உள்ளீர்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை. மோடியை அப்புறப்படுத்த வேண்டும் என்று அந்த பணியை நீங்கள் செய்தீர்கள். அதேபோன்று மோடியின் எடுபிடியாக உள்ள எடப்பாடி ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற உணர்வோடு வருகிற 19–ந்தேதி நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து டாக்டர் சரவணனை வெற்றி பெற செய்ய வேண்டும்.

எடப்பாடி பழனிசாமிக்கு முட்டு கொடுத்து மெஜாரிட்டி இல்லாத ஆட்சியை காப்பாற்றி வருவது மோடி தான். 19–ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் தான் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி. ஏற்கனவே அவர்கள் சதி திட்டம் போட்டு 18 பேரை தகுதி நீக்கம் செய்தார்கள்.

அ.தி.மு.க.வுக்கு எதிராக உள்ள 3 பேரை தகுதி நீக்கம் செய்தால் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கலாம் என்று நினைத்தனர். இந்த தகவல் தெரிந்த அடுத்த அரை மணி நேரத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் நான் சபாநாயகருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினேன். சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நோட்டீஸ் வழங்கினால் அதற்கு தான் முதலில் தீர்வு காண வேண்டும். அதற்கு பிறகு தான் சபாநாயகர் மற்ற பணிகளில் ஈடுபடமுடியும்.

இந்த நிலையில் 3 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றம் சென்றனர். அங்கு நடந்த விசாரணையில் தமிழ்நாட்டில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் சபாநாயகர் யார் மீதும் எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தடை போட்டது.

வருகிற 23–ந் தேதியுடன் மோடி ஆட்சி காலியாகி விடும். எனவே அவர்களை மோடியும் காப்பாற்ற முடியாது. அடுத்ததாக அவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு தடை வாங்குவதற்கு செல்லலாம். ஆனால் அவர்கள் கஷ்ட காலம் என்வென்றால் உச்சநீதிமன்றத்திற்கு தற்போது கோடை கால விடுமுறை விடப்பட்டு விட்டது. எனவே இனி அவர்களால் எங்கும் செல்ல முடியாது.

எதற்காக இந்த கணக்கை எடுத்து உங்களிடம் கூறுகிறேன் என்றால் வருகிற 19–ந் தேதி திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வருகிறது. எனவே ஆட்சி மாற வேண்டும் என்றால் நம்முடைய மெஜாரிட்டியை 119 எனக் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். அதற்கு திருப்பரங்குன்றம் தொகுதி வெற்றி மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story