அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி, ஆற்றில் மணல் அள்ளிய 20 மாட்டுவண்டிகள் பறிமுதல்
ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி சென்று மணல் அள்ளியதால் 20 மாட்டுவண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் மணவாளநல்லூர் மணிமுத்தாற்றில் அரசு, மாட்டுவண்டி மணல் குவாரியை நடத்தி வரு கிறது. இங்கு மணல் அள்ள வரும் தொழிலாளர்கள், அதிகாரிகளிடம் ஆன்-லைன் மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்யும் தொழிலாளர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) அதிகாரிகளால் அனுப்பி வைக்கப்படும். இதன் பின்னர் அவர்கள் ஆற்றுக்கு சென்று மணல் அள்ளிக்கொள்ளலாம். இந்த நடைமுறையில் தான் மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று மணல் அள்ளும் அனு மதிக்கான குறுஞ்செய்தி கிடைத்த, மாட்டுவண்டி தொழிலாளர்கள் குவாரிக்கு மணல் அள்ள சென்றனர். அப்போது அவர்களில் 20 பேர், குவாரி அமைந்திருக்கும் இடத்தை தாண்டி சென்று கோமங்கலம் மணிமுக்தாற்றில் மணல் அள்ளியதாக தெரிகிறது.
இதுபற்றி அறிந்த சப்-கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் விரைந்து சென்று குவாரியில் எல்லை தாண்டி சென்று மணல் அள்ளியவர்களின் 20 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது, மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆற்றில் குவாரியின் எல்லையை காட்ட வேண்டியது அதிகாரிகளின் பணியாகும். எங்களை மணல் அள்ள கூறிய இடத்தில் தான் நாங்கள் மணல் அள்ளினோம் என்று தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள், அனுமதி இன்றி மணல் குவாரி எல்லையை தாண்டி மணல் அள்ளியதால் தான் நடவடிக்கை எடுத்தோம் என தெரிவித்தனர்.
இதையடுத்து மாட்டுவண்டி தொழிலாளர்கள் விருத்தாசலத்திற்கு வந்து சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக சில வக்கீல் களும் வந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களிடம் சப்-கலெக்டர் பிரசாந்த் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story