வீட்டில் ஏ.சி. எந்திரம் வெடித்து விபத்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பலி - திண்டிவனத்தில் பரிதாபம்


வீட்டில் ஏ.சி. எந்திரம் வெடித்து விபத்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பலி - திண்டிவனத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 16 May 2019 5:00 AM IST (Updated: 16 May 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் ஏ.சி. எந்திரம் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உடல் கருகி பலியானார்கள். திண்டிவனத்தில் நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவில் வசித்தவர் கிருஷ்ணன் மகன் ராஜி(வயது 60). வெல்டிங் பட்டறை உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக்கொண்டிருந்தார். இரவு புழுக்கமாக இருந்ததால் படுக்கை அறையில் உள்ள ஏ.சி. எந்திரத்தை ராஜி ஓடவிட்டிருந்தார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஏ.சி. எந்திரம் திடீரென வெடித்தது. இந்த விபத்தினால் அறை முழுவதும் தீப்பிடித்து புகை மண்டலமானது. இந்த சத்தத்தை கேட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராஜி அவரது மனைவி கலைச்செல்வி(52), 2-வது மகன் கவுதம்(27) ஆகியோர் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர். அப்போது அறை முழுவதும் ஒரே புகை மண்டலமாக காணப்பட்டது.

இதனால் அவர்கள் 3 பேரும் தீ மற்றும் புகை மூட்டத்தின் பிடியில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு ராஜி மட்டும் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார். ஆனால் அவர் வீட்டின் வராண்டா பகுதியில் விழுந்து இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே ரத்தம் உறைந்து கிடந்தது.

இதற்கிடையே படுக்கை அறையில் இருந்து வெளியான புகை நெடியால் பக்கத்து அறையில் படுத்திருந்த ராஜியின் மூத்த மகன் கோவர்த்தனன் (30) அவரது மனைவி தீபகாயத்ரி ஆகியோர் என்னவோ ஏதோ என்று பதற்றத்துடன் ஓடி வந்தனர்.

அப்போது படுக்கை அறையில் கலைச்செல்வியும், கவுதமும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் முடியவில்லை.

பின்னர் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கலைச்செல்வியும், கவுதமும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்து திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகேஸ்வரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் பலியான ராஜி, கலைச்செல்வி, கவுதம் ஆகிய 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இறந்தவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

விபத்து நடந்த இடத்தை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விபத்து குறித்து கேட்டறிந்தார்.

விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அருகே ஏ.சி. எந்திரம் வெடித்து 3 பேர் பலியான சம்பவத்தால் காவேரிப்பாக்கம் பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story