கொத்தமங்கலத்தில் பனை ஓலையில் இளைஞர்கள் வைத்த தண்ணீர் பந்தலை ஊராட்சி நிர்வாகம் அகற்றியதால் பரபரப்பு


கொத்தமங்கலத்தில் பனை ஓலையில் இளைஞர்கள் வைத்த தண்ணீர் பந்தலை ஊராட்சி நிர்வாகம் அகற்றியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 May 2019 11:00 PM GMT (Updated: 15 May 2019 10:35 PM GMT)

கொத்தமங்கலத்தில் பனை ஓலையில் பந்தல் அமைத்து அதில் இளைஞர்கள் வைத்த தண்ணீர் பந்தலை ஊராட்சி நிர்வாகம் அகற்றிய தால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரமங்கலம்,

வறட்சி அதிகமாகி குடிதண்ணீர் தட்டுப்பாடும் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் கொளுத்தும் வெயிலில் வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர். தண்ணீர் இன்றி செடி, கொடிகள் கூட கருகி வருகிறது. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. இந்த நிலையில் தான் பொதுமக்கள் பயணங்களின் போது தாகம் தீர்க்க ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை இளைஞர்கள் அமைத்து வருகின்றனர். அதே போல தான் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் வாடிமாநகர் கடைவீதியில் பல கிராம மக்களும் வந்து செல்லும் இடத்தில் சாலை ஓரத்தில் பனை ஓலைகளில் பந்தல் அமைத்து அதன் கீழே 2 மண் பானைகளில் தண்ணீரையும் குடிக்க குவளையும் வைத்திருந்தனர். இளைஞர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டி வந்தனர்.

அகற்றியதால் பரபரப்பு

தினசரி தண்ணீர் முடிய, முடிய ஆட்டோவில் கொண்டு வந்து தண்ணீரை பானையில் நிரப்பி வந்தனர். இந்த நிலையில், நேற்று காலை இளைஞர்கள் வைத்திருந்த பனை ஓலை தண்ணீர் பந்தல் பிரிக்கப்பட்டு கிடந்தன. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது ஊராட்சி நிர்வாகத்தை சேர்ந்தவர்களே தண்ணீர் பந்தலை பிரித்துள்ளது தெரிய வந்தது. அருகில் உள்ளவர்களோ... இந்த தண்ணீர் பந்தலால் ஏராளமானோர் தாகம் தீர்த்து கொண்டனர். ஆனால் ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெற வில்லை என்று சொல்லி பந்தலை பிரித்து வீசிவிட்டனர். அதனால் தாகத்தோடு வரும் மக்கள் தண்ணீருக்காக தவிக்கிறார்கள் என்றனர். 

Next Story