திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்: 1,068 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்


திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்: 1,068 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்
x
தினத்தந்தி 16 May 2019 4:11 AM IST (Updated: 16 May 2019 4:11 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் புகைப்படம், பெயர் சின்னத்துடன் 1,068 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 297 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. இதில் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 3 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வாக்காளர்கள் தங்களது வாக்கை யாருக்கு அளித்தோம் என்பதை உறுதி செய்யக்கூடிய வி.வி.பேட் என்ற ஒப்புகை சீட்டு நவீன எந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுழற்சி முறையில் 1,068 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டது. மேலும் 356 கண்ட்ரோல் யூனிட் மற்றும் 356 வி.வி.பேட் எந்திரம் தயார் செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு அந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பேட் எந்திரங்கள் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக மின்னணு எந்திரங்களில் அகர வரிசைப்படி தொகுதியில் போட்டியிடும் 37 வேட்பாளர்களின் புகைப்படம் பெயர் மற்றும் சின்னம் என்று தனித்தனியாக பொருத்தப்பட்டது. மேலும் ஒரு நோட்டா என்று 38 வரிசைகள் கொண்டு மின்னணு எந்திரங்கள் தயார்படுத்தப்பட்டது.

இதற்கிடையே நேற்று தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான தாசில்தார் நாகராஜ் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் 18 மின்னணு எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர் அவற்றில் 1,000 மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அழுத்தும் பட்டன் முறையாக செயல்படுகிறதா? ஓட்டு போட்டவுடன் சத்தம் கேட்கிறதா? மின்னணு எந்திரத்தில் விளக்கு தெரிகிறதா? அழுத்திய பட்டன் படியே ஓட்டு விழுகிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வி.வி.பேட் எந்திரத்தில் யாருக்கு வாக்களித்தோம் என்பதையும் சோதனை செய்தனர்.

இதையடுத்து மின்னணு எந்திரங்கள், வி.வி.பேட் எந்திரங்கள் அனைத்து தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அந்த அறை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Next Story