கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை - போடி கோர்ட்டில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் மனு
கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போடி கோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனு அளித்துள்ளார்.
போடி,
தேனி மாவட்டம் போடி சுப்புராஜ் நகர் புதுக்காலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். வக்கீலான இவர், தேனி நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதிமய்யம் வேட்பாளராக போட்டியிட்டார். இவர், போடி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 13-ந்தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளப்பட்டியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது நாதுராம் கோட்சே என்றும், அவர் ஒரு இந்து தீவிரவாதி என்றும் வரலாற்றை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதேநாளில், தூத்துக்குடியில் அளித்த பேட்டியில் கமல்ஹாசனை ஒருமையில் பேசி, கமல்ஹாசன் நாக்கை அறுப்பேன் என்று வன்முறையை தூண்டும் முறையிலும், மிரட்டும் வகையிலும், தான் வகிக்கும் அமைச்சர் பொறுப்பை மறந்து அமைச்சராக பதவி ஏற்கும்போது உறுதி அளித்த சத்தியபிரமாண வாக்குமூலத்தை மீறி வரம்பு மீறி செயல்பட்டிருக்கிறார்.
மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை மீறி பொதுமக்களின் ஊழியராக இல்லாமல் தன் இஷ்டத்திற்கு அதிகார பலத்தை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார். பொதுமக்கள் மத்தியில் ஒரு பதற்றத்தையும், இரு கட்சியினர் இடையே வன்முறையை தூண்டும் வகையிலும் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
எனவே அவரின் செயல்கள் இந்திய தண்டனை சட்டம் 294 (பி), 153(ஏ), 506(1), 166 ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே இந்த மனுவை கோர்ட்டில் கோப்புக்கு எடுத்துக்கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சம்மன் அனுப்பி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது. எனவே, ராஜேந்திரபாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட மாஜிஸ்திரேட்டு பாரதிராஜா, வருகிற 20-ந்தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார். அன்றைய தினம் மனுதாரர் வாக்குமூலம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story