நாமக்கல்லில் ரூ.5 லட்சம் திருட்டு, இணையதள சேவை மைய ஊழியர் கைது


நாமக்கல்லில் ரூ.5 லட்சம் திருட்டு, இணையதள சேவை மைய ஊழியர் கைது
x
தினத்தந்தி 15 May 2019 10:45 PM GMT (Updated: 15 May 2019 11:17 PM GMT)

நாமக்கல்லில் தனியார் இணையதள சேவை மையத்தில் ரூ.5 லட்சம் திருடிய வழக்கில், அந்த மையத்தில் பணியாற்றிய ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

நாமக்கல்,

நாமக்கல் பஸ்நிலையம் அருகே தனியார் இணையதள சேவை மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த ராஜகோபால் (வயது 42) என்பவர் நடத்தி வருகிறார். இந்த மையத்திற்குள் கடந்த 12-ந் தேதி அதிகாலை புகுந்த மர்ம ஆசாமி அங்கு வைக்கப்பட்டு இருந்த ரூ.5 லட்சத்து ஆயிரத்து 392-ஐ திருடி சென்று விட்டார்.

இது குறித்து ராஜகோபால் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இணையதள சேவை மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அதிகாலையில் கருப்பு நிற பர்தா அணிந்து கொண்டு மையத்தின் கதவை திறந்து உள்ளே புகுந்த மர்ம நபர் ரூ.5 லட்சத்து ஆயிரத்து 392-ஐ திருடி சென்றது தெரியவந்தது. இதனால் போலீசாருக்கு இணையதள சேவை மையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அதன் அடிப்படையில் அந்த இணையதள சேவை மையத்தில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நாமக்கல் வண்டிக்கார தெருவை சேர்ந்த உதயா என்கிற உதயகுமாரை (28) பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் இணையதள சேவை மையத்தில் இருந்து ரூ.5 லட்சத்து ஆயிரத்து 392-ஐ திருடியதை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடம் இருந்து, திருட்டு போன ரூ.5 லட்சத்து ஆயிரத்து 392-ஐ மீட்டனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அணிந்து இருந்த பர்தா மற்றும் கைகளில் மாட்டி இருந்த கிளவுஸ் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து, திருட்டு போன பணத்தை மீட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டி, பரிசு வழங்கினார். 

Next Story