காயாமொழியில் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்


காயாமொழியில் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 May 2019 4:55 AM IST (Updated: 16 May 2019 4:55 AM IST)
t-max-icont-min-icon

காயாமொழியில் சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வலியுறுத்தி நேற்று மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் அருகே காயாமொழி சுற்று வட்டாரப்பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மின்மோட்டார் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 20-ந் தேதி நள்ளிரவில் ஆறுமுகநேரி துணை மின்நிலையத்தில் இருந்த 10 மெகாவாட் மின் திறன் கொண்ட மின்மாற்றி வெடித்து சிதறியது. சேதமடைந்த இந்த மின்மாற்றியினால் அதன் வாயிலாக மின்சாரம் பெறும் காயாமொழி, பள்ளிப்பத்து, தளவாய்புரம், குரும்பூர் மற்றும் திருச்செந்தூர் சுற்று வட்டாரப்பகுதியில் மின்சார விநியோகம் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதுடன் விவசாய நிலங்களில் மின்மோட்டாரை இயக்க முடியாத அளவு மின்னழுத்த குறைபாடு உள்ளது.

எனவே வாழை, தென்னை மற்றும் நஞ்சை பயிர்கள் அனைத்தும் தண்ணீரின்றி காய்ந்து போனது. விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக மின்மாற்றியை சீரமைக்குமாறு காயாமொழி சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள், உதவி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கைகள் வைத்திருந்தனர்.

ஆனால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காயாமொழி சுற்று வட்டார விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காயாமொழியில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மின்சாரமின்றி தண்ணீர் பாய்ச்ச முடியாமல் கருகிப்போன வாழைத்தார்கள் மற்றும் தர்பூசணி உள்ளிட்டவைகளையும் கையில் ஏந்தி இருந்தனர். இதையடுத்து திருச்செந்தூர் மின் வாரிய செயற்பொறியாளர் பிரபாகர், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், இன்று (அதாவது நேற்று) மாலைக்குள் காயாமொழி பகுதிக்கு கல்லாமொழி மின் பீடர் மூலம் மின்சாரம் வழங்கிட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சுமார் 1 மணி நேரம் நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story