வீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட பெண் வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பி பெற்றோருக்கு தகவல்


வீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட பெண் வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பி பெற்றோருக்கு தகவல்
x
தினத்தந்தி 16 May 2019 5:14 AM IST (Updated: 16 May 2019 5:14 AM IST)
t-max-icont-min-icon

மைனர் பெண் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக அந்த பெண் தனது பெற்றோருக்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பி உள்ளார்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்டம் கும்ளே பகுதியில் வசித்து வரும் ஒரு தனியார் பள்ளி தலைமை ஆசிரியரின் மகளான 17 வயது நிரம்பிய மைனர் பெண்ணை கடந்த 13-ந் தேதி வாலிபர் ஒருவர் காரில் கடத்திச் சென்றுவிட்டதாக தகவல்கள் பரவின. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தாரும், உறவினர்களும் உப்பலா, பண்ட்வால், விட்டலா உள்பட பல்வேறு இடங்களில் அந்த மைனர் பெண்ணையும், வாலிபரையும் தேடினர். அந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண் தரப்பினருக்கும், அந்த வாலிபர் தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.

இதற்கிடையே அந்த பெண் குடும்பத்தினர் கும்ளே போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் தங்களது மகளை, வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து தரும்படியும் கோரியிருந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில் அவர்களுடைய பெண்ணும், வாலிபர் ஒருவரும் இருந்தனர்.

அந்த வீடியோவில் பேசிய வாலிபர், ‘‘எனது பெயர் சுப்ரீத்(வயது 25). இந்த வீடியோவை நான் சுயநினைவோடுதான் எடுக்கிறேன். நானும், பஞ்சமியும்(21) கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணம் பல்மட்டா அருகே உள்ள ஆர்ய சமாஜத்தில் வைத்து நடந்தது. எங்களது திருமணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை’’ என்று கூறினார்.

அதேபோல் அந்த வீடியோவில் பேசும் பெண், ‘‘எனது பெயர் பஞ்சமி. எனக்கு வயது 21 ஆகிறது. ஆனால் என்னை மைனர் பெண் என்று சித்தரித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். நானும்(பஞ்சமி), சுப்ரீத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நான் வீட்டைவிட்டு வெளியேறி எனது காதலனான சுப்ரீத்தை கரம் பிடித்துள்ளேன். நான் சுப்ரீத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்று கூறுகிறார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ வெளியானதன் மூலம் இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் கோஷ்டி மோதலால் அப்பகுதியில் நிலவி வந்த பரபரப்புக்கு முடிவு கிடைத்துள்ளது. குடும்பத்தாரிடம் போலீஸ் விசாரணை

இதுபற்றி அறிந்த கும்ளே போலீசார் பஞ்சமி மற்றும் சுப்ரீத்தின் குடும்பத்தாரை அழைத்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story