பலத்த சூறைக்காற்றில் 4 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்


பலத்த சூறைக்காற்றில் 4 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்
x
தினத்தந்தி 16 May 2019 11:30 PM GMT (Updated: 16 May 2019 10:18 AM GMT)

குடியாத்தம் அருகே பலத்த சூறைக்காற்றில் 4 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தது.

குடியாத்தம், 

குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் மாலை பலத்த சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கொட்டமிட்டா, மோடிகுப்பம் வலசை, தனகொண்டபல்லி உள்ளிட்ட கிராமங்களில் சூறைக்காற்று பலமாக வீசியது. காற்று அப்பகுதியிலேயே வெகுநேரம் சுழன்று சுழன்று அடித்தது. மேலும் ஆலங்கட்டி மழையும் பெய்தது.

இதில் மோடிகுப்பம் வலசை கிராமத்தை சேர்ந்த கே.சந்திரன், கே.லட்சுமிபதி, பி.கே.கணேசன், வி.பாபு, டில்லிபாபு, கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்த காசி உள்ளிட்டோரின் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் 30–க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சரிந்தது. ஏராளமான மாமரங்களின் கிளைகள் உடைந்தன. 10–க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் முற்றிலும் சேதமடைந்தன.

பல லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் சேதமடைந்ததால் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பலத்த காற்றினால் தனகொண்டபல்லி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது பசு மாட்டின் மீது தென்னை மரம் சரிந்து விழுந்ததில் பசு மாடு பரிதாபமாக இறந்தது. கொட்டமிட்டா ஆம்பூரான்பட்டி கிராமம் அருகே பலமனேர் ரோட்டில் நெடுஞ்சாலையில் உள்ள புளியமரம் ரோட்டில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 3 மணி நேரத்திற்கு பின்னர் மரம் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் போக்குவரத்து சீரானது.

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை தாசில்தார் டி.பி.சாந்தி, வருவாய் ஆய்வாளர் சத்யநாராயணன், கிராம நிர்வாக அலுவலர் கலைவாணி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


Next Story