மரகத லிங்கம் மீட்பு: மனோன்மணி அம்மன் கோவிலில் பொன்.மாணிக்கவேல் ஆய்வு
மரகத லிங்கம் மீட்கப்பட்டதை தொடர்ந்து மனோன்மணி அம்மன் கோவிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆய்வு செய்தார்.
வேட்டவலம்,
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீனில் புகழ்பெற்ற மனோன்மனி அம்மன்கோவில் உள்ளது. இங்கு 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் 8–ந் தேதி பச்சை நிற மரகதலிங்கம், அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் போன்றவை திருட்டு போனது. இதுகுறித்து வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
நேற்று முன்தினம் மாலையில் ஜமீன் வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் திருட்டு போன மரகதலிங்கம் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டது.
இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் ஜமீன் மனோன்மனி அம்மன் கோவில் மற்றும் ஜமீன் வளாகங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து வேட்டவலம் ஜமீன்தார் மற்றும் ஜமீன் பணியாளர்களிடம் மரகதலிங்கம் எப்படி குப்பை கிடங்குக்கு வந்தது, யாராவது கொண்டு வந்து போட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை நடத்தினர்.
முன்னதாக பொன்.மாணிக்கவேல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.