தர்மபுரி அருகே வேன் கவிழ்ந்து ஒருவர் பலி; 12 பேர் காயம் சுற்றுலா சென்று திரும்பியபோது விபத்து
கர்நாடகாவை சேர்ந்தவர்கள் சுற்றுலா சென்று திரும்பியபோது தர்மபுரி அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 12 பேர் காயமடைந்தனர்.
நல்லம்பள்ளி,
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டம் கஜேந்திரகடா பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு ஆன்மிக சுற்றுலா வந்தனர். இந்த குழுவினர் சுற்றுலா முடிந்து நேற்று முன்தினம் இரவு மீண்டும் கர்நாடகாவுக்கு புறப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள வெத்தலைக்காரன் பள்ளம் பகுதியில் நேற்று அதிகாலை இவர்கள் சென்று கொண்டிருந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் வந்த நாகப்பா(வயது 65), அபிஷேக்(22), அம்ரித்(16), ரோகித்(13), மகேன்தேஷ்(52), மங்களா(42), சுரேஷ்(47), சிவபூர்வா(62), தனுஸ்ரீ(5), அக்கமா(38), புட்ராஜ்(20), கார் டிரைவர் முதுகுல்(32), கீதா ஆகியோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாகப்பா பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story