நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும் எடியூரப்பா பேட்டி
நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஆட்சி அதிகாரத்திற்காக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டன. அதனால் அந்த கட்சிகள் இடையே ஒற்றுமை ஏற்படவில்லை. வருகிற 23-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு கர்நாடக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படும்.
மாநிலத்தில் மாற்றத்திற்கான காற்று வீசுகிறது. சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளோம். 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநிலத்தில் ஆட்சி செய்கிறது.
2-வது இடத்தில் வெற்றி பெற்ற கட்சியை சேர்ந்தவர் துணை முதல்-மந்திரியாக உள்ளார். இது ஜனநாயகமா?. சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளில் வெற்றி பெற்றால் சட்டசபையில் எங்கள் கட்சியின் பலம் சுயேச்சை ஆதரவுடன் சேர்த்து 108 ஆக உயரும்.
காங்கிரசை சேர்ந்த சில அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு வர முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் வரை எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு நாங்களே உத்தரவிட்டுள்ளோம்.
வீரேந்திர பட்டீலை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்கிய காங்கிரசுக்கு வீரசைவ லிங்காயத் சமூக மக்களின் ஓட்டுகளை கேட்க தகுதி இல்லை. அவரை பதவியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை காங்கிரஸ் கூற வேண்டும்.
காங்கிரஸ் கட்சி மூலம், வீரசைவ லிங்காயத் சமூக மக்களுக்கு எப்போதும் அவமானம் ஏற்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர்கள் அக்கட்சிக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர். விளம்பரம் கிடைக்கிறது என்ற காரணத்திற்காக சித்தராமையா தினமும் என்னை பற்றி குறை கூறி பேசுகிறார்.
அவருக்கு விளம்பரம் கிடைப்பதாக இருந்தால் இன்னும் அதிகமாக என்னை விமர்சிக்கட்டும். முதல்-மந்திரியாக வேண்டும் என்று நான் கனவு காணவில்லை. எம்.எல்.ஏ.க்களை பேச வைத்து ஆட்டம் ஆடுவது யார் என்பது மக்களுக்கு தெரியும்.
சித்தராமையா பேசுவதை கேட்க மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. சட்டசபை தேர்தலில் தானும் தோற்று, காங்கிரசையும் தோற்கடித்த சித்தராமையாவுக்கு என்னை பற்றி பேச தகுதி இல்லை. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story