ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுக்கான பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்


ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுக்கான பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 16 May 2019 10:30 PM GMT (Updated: 16 May 2019 4:50 PM GMT)

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கான பொருட்களை தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தூத்துக்குடி,

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த தொகுதியில் 257 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் வாக்குப்பதிவுக்கு தேவையான 350 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உரிய பரிசோதனைகள் முடிக்கப்பட்டன. தொடர்ந்து ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, அந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமார் தலைமையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தி பரிசோதனை செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ளன. இது தவிர வாக்குப்பதிவுக்கு தேவையான உறைகள், படிவங்கள், நூல், சீல்கள், பேனா, பென்சில் உள்பட சுமார் 106 வகையான பொருட்கள் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு வந்து உள்ளன. இந்த பொருட்களை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தனித்தனியாக பிரித்து பைகளில் போட்டு வைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அழியாத மை மட்டும் சென்னையில் இருந்து இன்று(வெள்ளிக்கிழமை) கொண்டு வரப்படுகிறது.

இந்த பொருட்கள், வாக்குப்பதிவு எந்திரம் அனைத்தும் நாளை (சனிக்கிழமை) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு மண்டல அலுவலர்களால் கொண்டு செல்லப்பட உள்ளன. இதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

Next Story