திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மழை வேண்டி வருண யாகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மழை வேண்டி வருண யாகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 May 2019 11:00 PM GMT (Updated: 16 May 2019 5:07 PM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று மழை வேண்டி வருண யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருச்செந்தூர், 

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் மழை வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் யாகம் நடத்த அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து கோவில்களிலும் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம் மற்றும் சிறப்பு யாகபூஜை நேற்று நடந்தது.

இதையொட்டி கோவில் உள்பிரகாரத்தில் உள்ள யாகசாலை மண்டபத்தில் கணபதி ஹோமம், புண்ணியாகவாஜனம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து கும்பங்கள் ஆவாகனம் செய்யப்பட்டது. தொடர்ந்து யாகவேள்வி நடந்தது. கோவில் விதயகர்த்தா சிவசாமி சாஸ்திரிகள் தலைமையில் 12 வேதவிற்பன்னர்கள் யாகவேள்வி, வருண ஜெபம் நடத்தினர். பின்னர் யாகசாலை மண்டபம் பின்புறம் உள்ள காசி விஸ்வநாதர் சன்னதியில் உள்ள நந்திகேஸ்வரருக்கு தண்ணீர் பாத்தி கட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம், நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் மேளதாளங்கள் முழங்க எடுத்துவரப்பட்டு கடலில் புனித நீர் ஊற்றப்பட்டது. நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உள்துறை சூப்பிரண்டு ராஜ்மோகன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story