ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி சரத்குமார் பேச்சு


ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி சரத்குமார் பேச்சு
x
தினத்தந்தி 17 May 2019 4:45 AM IST (Updated: 16 May 2019 10:48 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று சரத்குமார் பேசினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று மாலையில் பேரூரணி, கூட்டாம்புளி, குலையன்கரிசல், ஸ்பிக்நகர் மற்றும் தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது;-

ஓட்டப்பிடாரம் வந்ததும் நினைவிற்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி., வாஞ்சிநாதன் ஆகியோர் தான். வீரம் நிறைந்த மண் ஓட்டப்பிடாரம். அந்த மண்ணில் நின்று வேட்பாளர் மோகனுக்கு வாக்கு கேட்கிறேன்.

கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பாக செயல்பட்டார். அவர் இல்லாத இந்த தேர்தலை சந்திப்பது ஒரு வருத்தம் தான். அவர் விட்டு சென்ற பணியை தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். மக்களுக்கான முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி ஜெயலலிதா பாதையில் பயணிக்கிறார். தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடந்து வருகிறது. ஜெயலலிதா ஏழை பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தங்கம் கொடுத்தார்.

அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் சிறந்த முறையில் மக்கள் பணியாற்ற கூடியவர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதவி மீது மட்டுமே மோகம். மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே தலைவர் ஆக முடியும். அ.தி.மு.க.வினருக்கு மக்கள் மீது தான் மோகம். மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் ஆக நினைக்கிறார். அது நடக்காது. அதற்கு அவர் தகுதியற்றவர். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வேட்பாளர் மோகன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, காமராஜ், விஜயபாஸ்கர், ச.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் சுந்தர் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Next Story