வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு


வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை கணவர் உள்பட 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 May 2019 9:30 PM GMT (Updated: 16 May 2019 5:35 PM GMT)

வரதட்சணை கொடுமையால் பெண் தூக்குப்போட்டு தற்கொைல செய்துகொண்டார். இதுதொடர்பாக கணவர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோலார் தங்கவயல்,

கோலார் தங்கவயல் பி.இ.எம்.எல். நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட போரமாக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கனகசிங். இவருடைய மகள் நந்தினி (வயது 26). இவருக்கும் கோலார் மாவட்டம் பங்காருபேட்டை தாலுகா சட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஏகாம்பர சிங் (28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏகாம்பர சிங் பெங்களுருவில் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் ஏகாம்பர சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு நந்தினியை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் நந்தினியை போரமாக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதனால் நந்தினி மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றிருந்த அவருடைய பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தங்கள் மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பி.இ.எம்.எல். நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்ைவயிட்டனர். பின்னர் போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நந்தினியின் தந்தை கனகசிங் பி.இ.எம்.எல். நகர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதால் தான் நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையே நந்தினியின் கணவர் ஏகாம்பர சிங் மற்றும் அவருடைய தாய், தந்தை, சகோதரி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர்.

இதுகுறித்து பி.இ.எம்.எல். நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story